குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நெடுஞ்சாலையில் 11 பேர் காரில் புஜ் நோக்கி பயணித்தனர். அப்போது உப்பு ஏற்றிக் கொண்டு எதிர்திசை சாலையில் பயணித்த டிரக் ஒன்று திடீரென சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு வந்து காரின் முன்பக்கமாக அதிவேகத்தில் மோதியது. கண் இமைக்கும் நொடியில், அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு டிரக்கும் கார் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டிரக்கின் டயர் திடீரென வெடித்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்கள் அறிந்த அம்மாநில முதல்வர் விஜய் ரூப்பானி, விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.