உடல்நிலை சரியில்லாத டிரைவருக்குப் பதிலாக இந்து மதத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கும் செய்தி ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அச்செய்திக்குக் கீழே ’இதுதாண்டா இந்தியா’என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மும்பை, புலதானா பகுதியில் வனத்துறை அதிகாரியாக இருப்பவர் சஞ்சய் என் மாலி. இவரிடம் ஜாபர் என்பவர் டிரைவராக இருக்கிறார். கடந்த மாதம் 6ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்கத்துவங்கிய நிலையில் ஜாபரிடம் ‘நீ நோன்பு இருக்கவில்லையா?’ என்று சஞ்சய் கேட்க உடல்நிலை சுகமில்லாததால் நோன்பு இருக்க இயலாத நிலையை விளக்கியுள்ளார். அதனை ஒட்டி ஜாபரிடம் ‘உனக்குப் பதில் இந்த வருடம் நான் நோன்பு இருக்கவா? என்று கேட்டுவிட்டு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர் நோன்புக்காக கடைப்பிடிக்கும் அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றி நோன்பு இருந்து வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்து நிருபர்கள் அணுகியபோது பேசிய சஞ்சய்,’ என்னைப்பொறுத்தவரை எல்லா மதங்களுமே நல்ல விசயங்களைத்தான் போதிக்கின்றன. நோன்பு இருந்த இந்த ஒரு மாத காலத்தில் நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தேன். எனது டிரைவர் ஜாபருக்காக நோன்பு இருந்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்’என்கிறார்.