varagu the best way to get health


வரகு கஞ்சி :

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

எப்படிச் செய்வது:

சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

தொட்டுக்கொள்ள:

கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த் துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

சத்துக்கள்:

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.