இரண்டு வகைப் பூசணிகளும், அவற்றின் மருத்துவ குணங்களும் ஒரு அலசல்…
பூசணிக்காய் கொடி இனத்தைச் சார்ந்தது ஆகும். இதன் இலைகள் பெரிதாகவும் ஐந்து பிளவுகளையும் ஓரத்தில் பெற்றுள்ளது. காய்கள் மிகவும் பெரிதாகவும் உருண்ட வடிவாயும் இருக்கும். காயில் மேலும் கீழம் சற்று குழிவான அமைப்பைப் பெற்றிருக்கும்.
பூசணியில் இருவகை உண்டு. ஒன்று சர்க்கரை பூசணி, இன்னொன்று வெண்பூசணி. இவை இரண்டுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
வெண் பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிறைப்பைப் போக்கவும், சிறுநீரக கோளாறுகளுக்கும் குறிப்பாக சிறுநீரை பெருக்கி வெளித்தள்ளவும், வயிற்றில் சேர்ந்து துன்பம் செய்யும் நாடாப் புழுக்களை வெளியேற்றும் புழுக் கொல்லியாகவும்,
உலர்ந்த பூசணிக்காயின் பொடி சளியுடன் ரத்தம் சேர்த்து துப்புகின்ற நோய்தனை குணமாக்கவும் வெண் பூசணியின் விதையில் இருந்து கிளைசனாட்ஸ், ஸ்டெரால் எஸ்ட்டர்ஸ் பாஸ்பாட்டிடைல் கோலின் ஆகிய கொழுப்புச் சத்தான மருத்துவவேதிப் பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.
மேலும், வெண் பூசணியின் விரையினின்று பிரிக்கப்பெறும் குடல் நோய்கள் குறிப்பாக குடற்புண்களை ஆற்றும் தன்மையுடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்து கின்றன. சீன மருத்துவத்தில் வெண் பூசணியின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி, இருமல் ஆகிய நோய்களை போக்கவும்,
வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் வெண்பூசணியின் தண்டுப் பகுதியை முறையற்ற மாதவிலக்கை சீர்செய்யவும், தோலில் மேற்புறத் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணியை ஆயுர்வேதத்தில் கூஷ்மாண்டம் என்கிற பெயரால் குறிப்பிடுவர். வெண்பூசணி சூட்டைத் தணிக்கும் என்றும் அதிகமாக உட்கொள்வதால் வாதச்குடைச்சல், ஐயப்பெருக்கு, மாந்தம் இவை உண்டாகும் என இந்திய மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு வகையான பூசணியைச் சர்க்கரை பூசணி, சர்க்கரைப் பரங்கி, பரங்கிக்காய் என்னும் பெயர்களால் குறிப்பிடுவர்.
பரங்கிக்காயின் சதைப்பற்று மென்மையான மயக்க மூட்டி, மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுவது, குளிர்ச்சியூட்டக் கூடியது. காயங்களின் மேற்பற்றாக போடுவதற்கு பயன்படுகிறது.
தீப்புண்களை ஆற்றும் தன்மையது. வீக்கங்களைக் கரைக்கும் தன்மையது, கொப்புளங்களை குணப்படுத்த வல்லது. பரங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கக் கூடியது. நாடாப்புழு போன்ற வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளக் கூடியது. பரங்கிக்காயின் விதைகள் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை தடுக்கவல்லது.
மேலும் சிறு நீரகத்தின் பல்வேறு கோளாறுகளையும் போக்கவல்லது. பரங்கிக்கொடியின் இலைகளில் சுண்ணாம்பு சத்து (100 கிராம் இலையில்) 36.38 மி.கி. அளவும், மெக்னீசியம் 38.80 மி.கி. அளவும், இரும்புச்சத்து 2.04 மி.கி. அளவும், துத்தநாகச் சத்து 0.76 மி.கி. அளவும், செம்புச் சத்து 0.42 மி.கி. அளவும் அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பரங்கிக்காயின் விதையில் இருந்து பிரிக்கப்படும் எண்ணெயில் ஸ்டிரால்ஸ் மற்றும் ட்ரைட்டர் பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் ஒற்றைத் தலைவலியையும் நரம்பு வலியையும் போக்கும் தன்மை யுடையது. பரங்கிக்காய் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் தருவது.
சிறுநீரகக் கற்களால் பாதிப்பபடைந்தவர்களும், பித்தப் பையில் கோளாறு உடையவர்களும் தினம் மூன்று வேளை என பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் அளவு சுமார் 10 நாட்கள் பருகுவதால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறுகள் தணியும். பரங்கிச்சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக் கூடியது. இதனால் நோய்கள் தவிர்க்கப்படுவதோடு மாரடைப்பும் தடுக்கப்படுகிறது.
பரங்கிச்சாறு மலச்சிக் கலைப் போக்கக் கூடியது மட்டுமின்றி சீரணத்தை தூண்டக் கூடியது. பரங்கிச் சாறு அமிலச்சத்தினைக் குறைக்கக் கூடியது. புண்களை (அல்சர்) ஆற்றக்கூடியது. இது சிறு நீரகத்தையும், சிறு நீர்ப்பாதையையும் சீர் செய்யக் கூடியது.
பரங்கிச் சாறு லேசான மயக்க மூட்டும் தன்மையை பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையைப் போக்க வல்லது. ஒரு டம்ளர் பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் தூக்கம் தூண்டப்படுகின்றது.
பரங்கிச் சாற்றில் பெக்ட்டின் என்னும் வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இதைக் குடிப்பதனால் கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் தீய விளைவுகளினின்று பாதுகாப்பைப் பெற இயலுகிறது.
பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் சிறந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் பானமாக அமைகிறது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து போகின்றது.
கருத்தரித்த மாதர்க்கே உரித்தான காலைநேரப் பிரச்சனைக்கு பரங்கிச்சாறு ஓர் உன்னதப் பலன்தரும் மருந்தாகிறது.
கல்லீரலைப் பற்றிய நுண் கிருமியான வைரல் ஹெப்பாட்டிடிஸ் – ஏ வைப் போக்கக் கூடியது. இதனால் கல்லீரலின் செயல்பாடுகள் மேன்மை அடைகின்றன. பரங்கிச் சாற்றில் அடங்கியிருக்கும் விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களினின்று பாதுகாப்பைத் தருகிறது.
பரங்கிச் சாற்றிலுள்ள விட்டமின்களான ‘ஏ’, ‘சி’ மற்றும் ‘ஈ’ மேலும் துத்தநாகம் ஆகியன கொப்புளங்கள், கட்டிகள், வீக்கங்கள், வண்டுக்கடி ஆகியவற்றினின்று சீக்கிரத்தில் குணமடையச் செய்கின்றன.
பரங்கிச் சாற்றை தலைக்குத் தடவி வைத்திருந்து குளிப்பதால் தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படுகின்றது.