30 வயதில் தொடங்கியே பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதயம் இரத்தக் குழாய் நோய்களுக்கு இரையாகிறார்கள். 

35 வயதிலேயே மாரடைப்பு மிகப் பரவலாகப் பலருக்கு ஏற்படுகிறது. அதிக மன உளைச்சலையும், ஓடியாடிச் செயல்படாமல் உட்கார்ந்த இடத்திலேயே பொழுதைக் கழிக்கும் வாழ்க்கை முறையையும் கொண்டவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் இதயம் இரத்தக் குழாய் நோய்களால் ஏற்படும் மரணங்கள் தடுக்கக் கூடியவையே.

இதயம் இரத்தக் குழாய் நோய்கள் பெரியவர்களைத்தான் பெரும்பாலும் தாக்கும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் எல்லா வயதினரையும், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து வகை மக்களையும் இது பாதிக்கும் என்பதுதான் உண்மை. 

பெண்களுக்கு ஏற்படும் மரணத்தில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் பாதிப்பே காரணமாகும். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், பிறவி இதயக் கோளாறுகளுடன் பிறக்கின்றன.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளின் ஒட்டுமொத்த விளைவுதான் இதற்குக் காரணம் என்பதும், இளைய சமுதாயத்தினரின் இதயங்கள் சீராக இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், இதய நோய்களைப் பெரும்பாலும் இல்லாமலே செய்துவிடலாம். 

உண்ணும் உணவில் எளிய மாற்றங்கள், பொருத்தமான உடற்பயிற்சி, உடல் எடையில் கவனம், மன உளைச்சலைக் குறைத்தல் ஆகியவை எல்லாம் இதய நோய்களைத் தடுத்து நிறுத்திவிடும்.

உலக இதயக் கூட்டமைப்பின்படி (World Heart Federation) இதயம்இரத்தக் குழாய் நோய்களால் ஏற்படும் அகால மரணங்களில் குறைந்தது 80% அளவு உயிர்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு முக்கியமான நான்கு அபாய காரணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 

ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை பயன்படுத்துதல், ஓடியாடிச் செயல்படாமல் உடல் உழைப்பு இல்லாத நிலை மற்றும் அதிக அளவு மது அருந்துதல் ஆகியவையே அந்த நான்கு காரணங்கள்.

உடல்நலம் என்பது தனிப்பட்ட ஒருவருக்கும் கூட்டாகப் பலருக்கும் உள்ள ஒரு பொறுப்பாகும். இந்த உலக இதய தினத்தன்று ஒவ்வொரு வரும் தங்கள் இதயத்திற்குத் தேவைப்படும் சக்தியை அளித்து, தங்கள் வாழ்க்கைக்கு உரிய ஆற்றல்திறனையும் அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் திகழ்வது நம் இதயம்தான். அதற்குத் தேவைப்படும் கவனத்தை அதற்கு தருவது சுலபம்தான்.