These tips are for women who want to be healthy ...
பெண்களின் 15 முதல் 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும்போதும் பிரசவமான பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின், அவளுடைய நலனைக் குறித்து தானோ அல்லது மற்றவர்களோ போதுமான கவனம் செலுத்துவதில்லை.
ஆனால், இந்த வயதில் தான், பெரும்பாலும் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதனால், அதிக கவனம் செலுத்துவது நல்லது.
பொதுவாக பெண்கள் தங்கள் உடல் நலனைக் குறித்து போதுமான கவனம் செலுத்தமால் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
1.. தனக்கு என்ன நேர்த்தாலும் பேசாமல் அமைதியாக இருந்து, சகித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்.
2.. தன் உடல் நலக்குறைவுகளைப் பற்றி மற்றவர்களிடம் கூற தயக்கம், மற்றும் கூச்சம்.
3.. பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் நேரிடக்கூடிய விளைவுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு/ அறிவு இல்லாமை.
4.. சிகிச்சை எடுத்துக் கொள்ள போதிய பணவசதி இல்லாமை. கணவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முன்னுரிமை இல்லாமை.
5.. குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி அக்கரை காட்டி, தன்னுடைய பிரச்சனைகளைக் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு ”தியாகச் செயல்” என்று நினைப்பது.
6.. பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல், அசாதாரணமாக குறைவாகவோ, அதிகமாகவோ மாதவிடாயின் போது அல்லது இடையில் உதிரம் போகுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடி வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவைகள் தொடர்ந்து காணப்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வெண்டும்.
மார்பகத்தில் கட்டி:
மார்பகத்தில் ஏற்படக்கூடிய கட்டிகள் எல்லாமே புற்றுநோய் என்று கருதக் கூடாது. ஆனால் ஒரு சில கட்டிகள் புற்று நோயாகக் கூட இருக்கலாம். ஆரம்பத்திலேயே புற்று நோயைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால் உயிரைக் காப்பாற்றலாம்.
பெண்கள் தங்களுக்கு மார்பகத்தில் ஏற்படக் கூடிய வலியில்லாத கட்டியை தாங்களே சுலபமாகக் கண்டுப் பிடிக்கலாம். மார்பகத்தில் கட்டி வலியில்லாமல் வளருமானால் அல்லது குழிவிழுந்து காணப்பட்டால் அக்குளியில் அல்லது கழுத்துப் பகுதிகளில் கட்டி ஏற்படலாம், மார்பகத்தில் புண் ஏற்பட்டால் அல்லது மார்பகக் காம்பில் இருந்து கசிவு ஏற்பட்டால் அல்லது அதில் குழி விழுந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் மாதத்திற்கு ஒரு முறை, அதாவது, மாதவிடாய் வந்து 7-10 நாட்களில் தன் மார்பகத்தைப் பரிசோதித்து பார்க்க வேண்டும்.
கண்ணாடி முன் நின்று, இரண்டு மார்பகத்துக்கும் ஒன்றுக்கொன்று ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்று பார்த்தல், படுத்துக் கொண்டு தன்னுடைய உள்ளங்கைகளால் மார்பகத்தைத் தடவிப் பார்த்து ஏதேனும் கட்டி போல் தென்படுகிறதா என்று பார்த்தல் ஆகிய வழிமுறைகளை உபயோகித்து, கட்டி இருப்பதாக சந்தேகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
