These medical properties of ginger give it the uniqueness ...

** இஞ்சி. மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி, எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும். 

** வியர்வை உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும்.

** இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு வகைக்கு 30 மி.லி யுடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி அளவாக அடிக்கடி கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைக் சாற்றையும் பயன்படுத்தலாம்.

** இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு வகைக்கு 15 மி.லி தேன் கலந்து 15 மி.லி அளவில் 3 வேலையாகச் சாப்பிட்டு வர இருமல், இரைப்புத் தீரும்.

** 200 கிராம் இஞ்சி தோல் நீக்கிச் துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (45 நாள்கள்) சாப்பிட உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சுவலியும் மனத்திடமும் பெற்று முகப்பொலிவும், அழகும் உண்டாகும். இது ஒரு கற்ப மருந்து.

** இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்ச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

** 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்கம் பூ, 6 மிளகு எவற்றைச் சிதைத்து அரைலிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலை,மாலை குடித்து வர ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை தீரும்.

** முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து இக்கலவைக்குச் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து சிறுதீயில் பதமுறக்காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலையிலிட்டுக் குளித்துவர நீர்க்கோவை, நீர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் தீரும்.