இடுப்பு, தொடையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்

உடலில் தேவையற்ற கொழுப்புள்ள யாருக்கும் இதய நோய்கள் வரலாம். உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்களைப் போலவே சில பிரத்யேகப் பயிற்சிகளாலும் கொழுப்பைக் குறைத்து இதயத்தைக் காக்கலாம். இன்று கொழுப்பை குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகளை பார்க்கலாம்.

மௌன்டெயின் க்ளைம்பர் (Mountain Climber)

விரிப்பில் முட்டிப் போட்டு இருக்க வேண்டும். முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, தவழும் குழந்தையைப் போன்ற நிலையில் இருக்க வேண்டும். உடலை நேராக வைத்துக்கொண்டு, வலது காலை மட்டும் பின்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். முழு உடலின் எடையையும் கை மற்றும் பாத விரல்கள் தாங்கும்படி இருக்க வேண்டும்.

இதேநிலையில் ஒரு நிமிடம் வரை இருக்கலாம். மீண்டும் பழைய நிலைக்கு வந்த பிறகு, இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து பத்து முறை செய்யலாம்.

பலன்கள்:

இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப்பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும்.

ஹை நீ (High Knee)

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை வீசி நடப்பது போன்று வைக்க வேண்டும். இடது காலை இடுப்புவரை அல்லது இடுப்புக்குமேல் முடிந்தவரை உயர்த்த வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து பத்து முறை செய்யலாம்.

பலன்கள்:

இடுப்பு, தொடை மற்றும் முழங்கால் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.