Some of the oils and the great benefits we get from them ...

1.. புதினா எண்ணெய்

புதினா எண்ணெயை ‘மிட்டாய் புதினா’ என்றும் சொல்வார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் `மெந்தால்’ (Menthol) எனப்படும். மெந்தாலை மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.

இலைகளையும் பூக்களையும் பயன்படுத்தி ஆவியாக்கி குளிரச் செய்யும் முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். இந்த எண்ணெய் குளிர்ச்சியானது.

வாயில் ஊற்றிக் கொப்பளிக்கலாம். சுவாசப் பாதையை சீர்செய்ய உதவும்; பத்து துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து குளித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உடல்வலியைக் குறைக்கும் தன்மைகொண்டது; வயிற்றுவலி, வாயுப்பொருமல், கிருமித்தொற்றை சரிசெய்ய உதவும்.

தடுமன், ஜூரம், தொண்டைப்புண், காதுவலி, குரல்வளை வீக்கம், தலைவலி, மாதவிடாய்க் கோளாறு, ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்தும். இதன் பெப்பர்மின்ட் கலந்த பற்பசையை உபயோகித்து, ஈறுகளில் ஏற்படும் தொல்லைகளைப் போக்கலாம்.

புதினா எண்ணெயை நீரில் கலந்து குளிக்கலாம். மசாஜ் ஆயிலாகப் பயன்படுத்தலாம்.

இது, யூகலிப்டஸ், ரோஸ்மேரி, லாவண்டர், சிட்ரஸ் எண்ணெய் வகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அவற்றின் குணங்களை மேம்படுத்தும்.

சுத்தமான புதினா எண்ணெயை நெற்றிப் பொட்டில் தடவினால், ஒற்றைத் தலைவலி பறந்துபோகும். தேங்காய் எண்ணெயுடன் கலந்து வயிறு, விலாப்பகுதியில் தேய்த்தால், நெஞ்செரிச்சல் நீங்கும். நீரில் நாலைந்து சொட்டுகள் சேர்த்து கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் அகன்றுவிடும்.

கர்ப்பிணிப் பெண்கள் மின்ட் ஆயிலை உபயோகிக்கக் கூடாது.

2.. எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்துணர்வே. நிறைந்த மணம் உடையது. உணவு, பானம், டிடர்ஜெண்ட் சோப், சுத்திகரிப்பான்… என எலுமிச்சை எண்ணெய் இல்லாத இடங்களே இல்லை.

ஒரு கிலோ எலுமிச்சை எண்ணெய் எடுக்க சுமார் 3,000 எலுமிச்சைப் பழங்களின் சாறு தேவைப்படும்.

எலுமிச்சையில் புளிப்பு, இனிப்பு, உலரச்செய்யும் தன்மை போன்றவை உள்ளன. இது, சருமப் பராமரிப்புக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எண்ணெய் பிசுக்குள்ள சருமம், செரிமானக் கோளாறு, தொற்றுநோய்கள், ரத்தச்சோகை, உயர் ரத்த அழுத்தம், ஈரல் அல்லது பித்தப்பை சுருங்கிப்போதல் போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.

எலுமிச்சை எண்ணெயை உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம்; நீரில் கலந்து குளிக்கலாம்; மருத்துத் திரவமாகவும், ஷாம்பூவாகவும், மசாஜ் ஆயிலாகவும் உபயோகிக்கலாம்.

வாசனையைப் பொறுத்தவரை, எலுமிச்சை எண்ணெய் லேசானது; இனிய நறுமணம் கொண்டது.

லாவண்டர், ஜடமான்ஸி, தவனம் போன்றவற்றுடன் எலுமிச்சை எண்ணெயை எளிதில் கலக்கலாம்.

பூச்சிக்கடி அல்லது குளவி கொட்டுக்கு சுத்தமான எலுமிச்சை எண்ணெயைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

3.. ரோஜா எண்ணெய்

‘ரோஜா’ தைலங்களின் ராணி. இனிய மணமுடையது. பல நிறங்களில் கிடைக்கும்.

ரோஜா இதழ்களைக் காய்ச்சி வடித்து சேகரிப்பது மிகவும் கடினம். சிறிதளவு எண்ணெய் எடுக்கவே அதிகச் செலவாகும்.

ரோஜாப் பூக்களை இரண்டு மூன்று முறை காய்ச்சி வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். இதன் தயாரிப்பு செலவு காரணமாக கலப்படச் சரக்குகளும் புழக்கத்தில் உள்ளன.

ரோஜா ஓர் ஆன்மிக உணர்வை, பாதுகாப்புத் தன்மையை வழங்குவது. இது கோபத்தைக் குறைக்கும்; மனச்சோர்வை நீக்கும்; ஈரலை வலுப்படுத்தும்; சருமப் பராமரிப்பில் இதற்கே முதல் இடம்.

இனிப்பு, கார, கசப்பு, துவர்ப்பு சுவைகளை உடையது; குளுமைத் தன்மை கொண்டது.

உடல் சோர்வை நீக்கும்; சிறந்த மலமிளக்கி; வயிற்றுவலி, வாயுப் பொருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்; செல்களைப் புதுப்பிக்க உதவும்.

மாதவிலக்கு ஒழுங்கற்றுப்போதல், தலைவலி, மனச்சோர்வு, தொண்டைப்புண், குழப்பம், துயரம், பரு, சருமம் முதுமையுறுதல், ஆண்மைக்குறைவு, மன உபாதை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

வாசனைத் திரவியமாக, மருத்துவத் திரவமாகப் பயன்படும்; குளியலிலும், பர்ஃபியூமாகவும், மசாஜுக்கும் உபயோகிக்கலாம்.

சந்தன எண்ணெய், மல்லிகை, லாவண்டர், தேவதாரு, கதிர்ப்பச்சை எண்ணெய்களுடன் ரோஜா எண்ணெய் நன்கு கலக்கும்.

4.. வெட்டிவேர் எண்ணெய்

வெட்டிவேர், புல்வகையைச் சார்ந்தது. புத்துணர்வை அளிக்கும். இதன் வேர்ப்பகுதியில் இருந்து தைலம் எடுக்கப்படுகிறது. வெட்டிவேர் நில அரிப்பு (Erosion) உள்ள இடங்களில் செழித்து வளரும்.

வருத்தம் நீக்கும்; ஆவேசத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்; மயக்க மருந்தாகவும் செயல்படும்.

சருமம் முதிர்வடைவதைத் தடுக்கும். சரும எரிச்சலைப் போக்கும்.

இனிப்பு மற்றும் கசப்பு சுவை உடையது.

அழுகல் தடுப்பானாக, போஷாக்கு மருந்தாக, வலுவூட்டியாக, மோக ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக, ஹார்மோன் பேலன்ஸராகச் செயல்படுகிறது. செல்களை புதுப்பித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மூட்டுவலி, பயம், தூக்கமின்மை, மன உளைச்சல், சரும அயர்வு, சரும முதிர்ச்சி, எரிச்சலுடன் மாதவிடாய், பசியின்மை போன்றப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

லோஷனாக, மசாஜ் எண்ணெயாக, வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தலாம். குளியலிலும் உபயோகிக்கலாம்.

ஜடமான்ஸி, ரோஸ் வுட், கதிர்ப்பச்சை, தவனம், ரோஜா, சந்தனம், லாவண்டர் எண்ணெய் வகைகளுடன் நன்கு கலக்கும்.

சில சொட்டு தைலத்தை நீரில்விட்டுக் குளித்தால் உடல் சோர்வு, மன உளைச்சல் தீரும். நாம் தினமும் சருமத்துக்குப் பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்து தோளிலும், கழுத்திலும் தேய்த்துக்கொள்ளலாம். கழுத்துப் பிடிப்பு குணமாகும்.