கைகள் கழுவுவதற்கும் முக்கியமான வழிமுறைகள் உள்ளன. அதை என்னென்ன என்பது குறித்தும், அதை பின்பற்றுவதற்கான வழிமுறைகளை பற்றியும் இந்த பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்வோம்.
கொரோனாவுக்கு பிறகு உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நுண்கிருமிகள் நம் கைகளில் தான் இருப்பது போன்ற உணர்வு நம்மிடையே பலருக்கும் உண்டு. இதனால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்கிற உணர்வு நம்மிடையே நிலவுகிறது. இதனால் அடுத்தவர்களிடம் கையைக் கொடுத்து பேசுவதற்குக் கூட நமக்கு தயக்கம் ஏற்படுகிறது. அதை போக்கவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால் இதை படிக்கும் நீங்கள், கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கையை கழுவுங்கள். அதேபோல உங்களுடைய சுற்றத்துக்கும் நட்புக்கும் இதில் கொடுக்கப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இதன்மூலம் சுத்தம் உங்களுடைய சுற்றத்திலும் நிலவும்.
செக் லிஸ்ட்
பருவ காலங்களில் அடிக்கடி கையை சுத்தம் செய்து சோப்புப் போட்டு கழுவுவது பல்வேறு வகையில் நன்மை செய்கிறது. அதன்படி சளி, இருமல், காய்ச்சல், குடல் பிரச்னைகள், மூச்சுப் பிரச்னை போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் மழைக் காலங்களில் கையை சுத்தம் செய்வதற்கான செக் லிஸ்டுகளை அந்தந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதான் வழிமுறை
நீரில் முதலில் கையை நன்றாக நனைத்துவிட வேண்டும். அதையடுத்து சோப்புப் போட்டு நுனி விரலில் இருந்து மணிக்கட்டு வரை நன்றாக தேய்க்க வேண்டும். கைகளின் பின்பக்க, விரல்களுக்கு நடுவில், நகக் கண்கள் உள்ளிட்டவற்றிலும் நன்றாக சோப்புப் போட்டு தேய்த்துவிட வேண்டும். விரல்களின் நுனிகளை மாற்றி, மாற்றி உள்ளங்கைகளில் வைத்து தேய்ப்பது அந்த பகுதியை நன்றாக சுத்தம் செய்யும். குறைந்தப்பட்சம் 20 விநாடிகளில் இருந்து 25 விநாடிகள் வரை ஒவ்வொரு பகுதியையும் நன்றாக சோப்புப் போட்டு தேய்த்து, சுத்தமாக கழுவி எடுப்பது நல்லது.
நீங்கள் இதுவரை கேட்டிராத உப்புக் குறித்த அரிய தகவல்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!
எப்போது எல்லாம் கைகளை கழுவ வேண்டும்?
கழிவறையை பயன்படுத்திய பிறகு, சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், சாப்பாடு சாப்பிட்ட பிறகு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பிறகு, கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடுவதற்கு முன்பு, அழுக்கான பகுதிகளை தொட்ட பிறகு, பொதுவான இடங்களில் இருக்கும் கைப்பிடிகளை தொட்ட பிறகு, செல்லப்பிராணிகளை தூக்கிவைத்து கொஞ்சிய பிறகு, இருமல் அல்லது தும்பலின் போது கைகளைக் கொண்டு மூக்கு மற்றும் வாய் பகுதியை முடிய பிறகு உள்ளிட்ட செயல்பாடுகள் செய்தவுடன் கையை உடனடியாக கழுவ வேண்டும்.
கோழிகளின் ஈரல் - மனிதன் சாப்பிடுவதற்கு உகந்ததா?
கைகளை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
நாம் நினைக்கும் அளவுக்கு நம்மிடையே இருக்கும் கிருமிகள் கெடுதலை மட்டும் ஏற்படுத்தக் கூடியவை இல்லை. நுண்கிருமிகளில் நமக்கான நன்மையை வழங்கக்கூடிய கிருமிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் வெறும் தண்ணீரில் கைகளை கழுவிக் கொண்டு, செயல்பாடுகளை துவங்குபவர்கள் கூட நல்ல ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு கைகளை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கம் நம்மிடையே அதிகரித்துள்ளது. ஆகையால் கைகளை கழுவுவது தொடர்பான புரிதலை நாம் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் கிராமப்புறங்களைச் சேர்ந்த 70 சதவீத மக்களும், நகர்ப்புறங்களில் 42 சதவீத மக்களும் மட்டுமே சோப்புப் போட்டு கைகளை கழுவுவது தெரியவந்துள்ளது.
