நிலவேம்பு கஷாயம்

ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தே நிலவேம்பு கஷாயம்.

மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே பல இடங்களில் இந்த கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இது டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, தலைவலி, செரிமானம், மூட்டு வலி, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது.

நிலவேம்பு கஷாயம் தயாரிக்க தேவையான மூலிகைகள்

சிறியாநங்கை (நிலவேம்பு), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு

செய்முறை

நாம் மேலே கூறியுள்ள ஒன்பது மூலிகைகளை நன்கு உலர (காய) வைத்து, அனைத்து மூலிகைகளையும் சம பங்கு அளவில் எடுத்து கலந்து, அரைத்துப் பொடியாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அந்த நீரை இதமான சூட்டுக்கு ஆற வைத்து பருக வேண்டும்.

மருத்துவ குணங்கள்

மூட்டு வலி

நிலவேம்பு கஷாயம் பருகி வந்தால் மூட்டு வலி மற்றும் உடல் வலி குறையும். மேலும் பின்னாட்களில் இதுப் போன்ற வலிகள் ஏற்படாமல் இருக்க வலு சேர்க்கும். டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது மூட்டு வலியும், தசை வலியும் ஏற்படும் அவற்றை இது சரி செய்கிறது.

நீரிழிவு நோய்

டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோய்க்கும் நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக விளங்குகிறது. இது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு

நிலவேம்பு கஷாயம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் நச்சுக்களை விரைவாக அழிக்க முடியும்.

தலைவலி

அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரண்டு வேளை இந்த கஷாயத்தை குடித்து வந்தால். தலையில் நீர்க்கட்டு குறைந்து, தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளும் கூட சரியாகும்.