Medical benefits of raggi
கேழ்வரகு
நாடு முழுவதும் கேழ்வரகு, கேப்பை, ராகி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த உறுதிமிக்க தானியம் அதிக சக்தி தரும் உணவு. அதனால், கடுமையாக உழைப்பவர்கள் கேழ்வரகு சார்ந்த உணவை விரும்புகிறார்கள். ஏனென்றால், உடலுக்குத் தேவைப்படும் சக்தியைக் கேழ்வரகு உடனடியாகத் தரும்.
அதிக ஊட்டச் சத்தையும், அதற்கு இணையாக நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உணவாகவும் திகழ்கிறது கேழ்வரகு. அதன் காரணமாக நிச்சயமாக, இதை அற்புத உணவு எனலாம்.
ஊட்டச்சத்துகள்
பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதாக இந்தத் தானியம் திகழ்கிறது.
100 கிராம் கேழ்வரகில் உள்ள கால்சியத்தின் அளவு 34.4 கி.
எளிதாக ஜீரணமாகக்கூடிய தானியம் என்பதால், தென்னிந்தியாவில் மாவாக மாற்றப்பட்டு, பாலுக்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்குக் கூழாகக் கொடுக்கப்படுகிறது.
கேழ்வரகில் உள்ள புரதம், பாலில் உள்ளது போன்ற முழுமையான புரதம். அதன் காரணமாக லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்குச் சிறந்த மாற்று உணவாக இருக்கிறது.
இதிலுள்ள மற்றொரு ஆரோக்கிய அம்சமும் முக்கியமானது. குறைந்த கிளைசிமிக் உணவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.
மற்ற சிறுதானியங்களைப் போலவே குளூட்டன் இல்லாத உணவும்கூட. அதனால், குளூட்டன் அலர்ஜி இருப்பவர்களும் இதைச் சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் கேழ்வரகு தோசை, உப்புமா, கூழ் ஏன் அல்வாகூடத் தயாரிக்கப்படுகிறது. அதேநேரம் இதை மாவாகத் திரித்துச் சாப்பிடும்போது, இதிலுள்ள நார்ச்சத்து அதிகரிக்கிறது. அதனால் எப்பொழுதெல்லாம் கோதுமை மாவைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்பொதெல்லாம் பாதி கேழ்வரகு மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
