பத்தியம் இருக்கும்போது பூண்டு மற்றும் வெங்காயம் தவிர்க்கப்படுவது ஏன்?
பத்தியம் என்பது உட்கொள்ளும் மருந்து சிறந்த முறையில் குணப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்வது. பூண்டு வெங்காயம் போன்றவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் மற்ற மருந்துடன் குறுக்கிடாமல் இருக்கவே இவை இரண்டையும் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆயுர்வேதம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளில் மட்டுமே இதுபோன்ற பத்தியம் பின்பற்றும் நடைமுறை இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அனால் சில அலோபதி மருத்துவ சிகிச்சையின் போதும் வெங்காயம், பூண்டை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பூண்டு, வெங்காயம் முதலியவை மிகவும் வீரியத் தன்மை கொண்ட காய்கறிகள். குறிப்பிட்ட மருந்துகள் சாப்பிடும் போது, அவை இரண்டையும் சேர்த்துக்கொண்டால், அதனுடைய குணம் பத்திய மருந்தின் குணத்தை முறித்து விடும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதுதவிர வெங்காயம் மற்றும் பூண்டை பத்தியக் காலத்தில் சாப்பிடுவதால் உடலுறவு பிரச்னை, ஒவ்வாமை அறிகுறி, இரத்தப் பெருக்கு, அமிலத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.
காதல் இருக்கலாம் கலவிக் கூடாது
ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ முறையில் பத்தியம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதற்குரிய மருத்துவர்கள் உணவுக் கட்டுப்பாடுடன் உடல் கட்டுப்பாட்டையும் குறிப்பிடுகின்றனர். இது மருந்தின் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பிட்ட மருத்துவ முறைகளில் சில வகை மருந்துகளை தினசரி எடுத்துக்கொள்ளும் போது உடலுறவு, சுய இன்பம் அனுபவிக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கப்படுகிறது. அதேபோன்று ஆண்களுக்கு தூங்கும் போது விந்து வெளியேறுவதும் ஆபத்தானது என்கின்றனர். இதை தடுக்க வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்ப்பது முக்கியமாகிறது. இவை இரண்டுக்கும் காம உணர்வைத் தூண்டும் ஆற்றல் இருப்பதால், இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அலோபதி மருத்துவ முறைகளிலும், வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், பூண்டு அதிக வீரியம் கொண்டது
அனைத்து விதமான மருந்துகளுக்கும், அதனுடைய தன்மைக்கு ஏற்ப வீரியம் மாறுபாடு இருக்கும். ஆனால் இயல்பாகவே உட்சேர்க்கையைப் பொறுத்து மருந்துகளின் வீரியம் மாறுபாடு வரையறுக்கப்படும். அவ்வாறு அதிக வீரியத்துடன் தயாரிக்கப்படும் மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது வெங்காயம் மற்றும் பூண்டை உண்ணக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. வீரியம் மிக்க மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுக்கு ஈடான வீரியத்தன்மை மிக்க உணவுப் பொருட்களை உட்கொள்வது தேவையில்லாத பாதிப்புகளைக் உண்டாக்கிவிடும். காய்கறிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டுக்கும் வீரியம் அதிகம். அதனால் குறிப்பிட்ட மருத்துவ முறைகள் அல்லது மருந்துகளை சாப்பிடும் போது, வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்ள வேண்டாமென்று கூறப்படுகிறது.
வெங்காயம், பூண்டின் தன்மையும் ஒரு காரணம்
வெங்காயத்தை சுத்தம் செய்து, நறுக்கி நெடுநேரம் வைத்திருந்தால், அது காற்றிலுள்ள நுண்கிருமிகளைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். இதே குணாதிசியம் பூண்டுக்கும் உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டை நெடுநேரம் வைத்திருந்து பயன்படுத்தும்போது நுண்கிருமிகளின் தன்மை நமது உடலுக்குள் சென்றுவிடும். அதிநுட்ப மருந்துகளைப் சாப்பிடும்போது வெங்காயம் மற்றும் பூண்டின் தன்மை தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இதுதவிர, பூண்டின் பயன்பாடு அதிகரித்தால் மூல நோய் , குடற்புண் உள்ளிட்ட சில நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற உடல்நலன் சார்ந்த காரணங்களால் பத்தியக் காலத்தில் வெங்காயம் மற்றும் பூண்டுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
சர்க்கரை நோய் இருக்கும் பெண்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாமா..??
ஒவ்வாமைக்கு வித்திடுகிறது
ஏற்கனவே ஒருசிலருக்கு வெங்காயம் மற்றும் பூண்டு ஒவ்வாமையை உருவாகக்கூடியதாக இருக்கும். ஆனால் அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்திருக்காது. அதாவது சைனஸ் பிரச்னை இருப்பதற்கு கூட, வெங்காயம் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது காரணமாக இருக்கலாம். இது பாதிக்கப்பட்ட பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் பூண்டு ஒரு சிலருடைய உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மருத்துவ பத்தியம் இருக்கையில் இந்த ஒவ்வாமைக் குணம், மருந்துகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளதால், பூண்டு உட்கொள்ள வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.
Idly : தினசரி குழந்தைகள் இட்லி சாப்பிடுவது நல்லதுதானா?
கர்ப்பிணிகள் வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது
கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப் பராமரிப்பு மருந்து என்கிற முறை நடைமுறையில் உள்ளது. இது வீட்டு மருத்துவ முறையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்போது அவர்களுக்கு பூண்டு கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. குழந்தை பிறப்புக்கு பின்னர், அவர்கள் அதிகம் பூண்டு சாப்பிட வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அவர்கள் பூண்டை அதிகளவில் உட்கொண்டால் பிரசவத்தின் போது ரத்தப் போக்கு அதிகமாக வாய்ப்புள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு இரண்டிலும் அமிலத்தன்மை நிறைந்து காணப்படுகிறது. அமிலத்தன்மை குறைப்பு சார்ந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, இவற்றைத் தவிர்ப்பது உடலுக்கு நன்மையை தருகிறது.