தினமும் 10,000 ஸ்டெப் எதற்காக நடக்கணும்?...இதனால் என்ன மாற்றம் வரும்?
தினமும் 10,000 ஸ்டெப் நடப்பது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பலவிதமான நன்மைகளை தரும் என்கிறார்கள். இந்த 10,000 ஸ்டெப் நம்முடைய உடலில், ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 ஸ்டெப்கள் நடந்தால் கிட்டதட்ட 300 கிராம் கலோரிகள் எரிக்கப்படுவதாக சொல்லப்படகிறது.

சென்னை : தினமும் வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது என்றும், 10,000 முதல் 25,000 ஸ்டெப்களாவது குறைந்த பட்சம் நடக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இப்படி 10,000 ஸ்டெப் தினமும் நடந்தால் நம்முடைய உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிந்த கொள்ளலாம்.
10,000 ஸ்டெப் என்பது எதை குறிக்கும்?
தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் என சொல்வது ஓகே. ஆனால் அது என்ன குறிப்பிட்டு, 10,000 ஸ்டெப் என சந்தேகம். 10,000 ஸ்டெப் என்பது சுமாராக 8 கி.மீ., நடந்ததற்கு சமமாகும். ஆனால் இந்த தூரம் என்பது அவர்கள் காலடி எடுத்து வைக்கும் தூரம், நடக்கும் வேகம், உடல் எடை, உயரம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் தினமும் ஒரு மணி நேரம் முதல் 40 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக எளிமையான முறையாக பயன்படுத்தும் ஒரு குறியீடு தான் 10,000 ஸ்டெப் என்பது.
10,000 ஸ்டெப் நடக்க முடியுமா?
சரி, இப்படி தினமும் அனைவராலும் 10,000 ஸ்டெப் நடக்க முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியும். ஆனால் அதற்காக கண்டிப்பாக 10,000 ஸ்டெப் நடந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. உங்களால் எவ்வளவு நடக்க முடியுமோ, அந்த அளவிற்கு நடக்க முயற்சி செய்யுங்கள். உடம்பை லேசாக்கி, ஜாலியாக நினைத்து நடந்தால் இந்த 10,000 ஸ்டெப் என்பது அப்படி ஒன்றும் கஷ்டம் கிடையாது. நீங்கள் இப்போது தான் வாக்கிங் போக துவங்கி இருக்கிறீர்கள் என்றால் ஆரம்பத்தில் சிறிது நாட்களுக்கு தொடர்ச்சியாக நடக்காமல், 30 முதல் 60 நிமிடத்திற்கு ஒரு முறை பிரேக் எடுத்துக் கொண்டு, பிறகு நடக்க துவங்கலாம். ஸ்மார்ட் வாட்ச், மொபைல் ஆப் உள்ளிட்டவற்றை கொண்ட நீங்கள் தினமும் எத்தனை ஸ்டெப் நடக்கிறீர்கள் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.
10,000 ஸ்டெப் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
1. தினமும் 10,000 ஸ்டெப் நடந்தால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் குறையும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.
2. கலோரிகள் நன்கு எரிக்கப்படும். மிக எளிமையாக, அதே சமயம் ஆரோக்கியமாக உடல் எடையை வைத்திருக்க முடியும்.
3. உடல் தசைகளை ஆக்டிவாக வைக்கும். மூட்டுகளில் வளைவு தன்மையுடன் இருக்கும். மூட்டுக்களில் இறுக்கம் அல்லது கடினத்தன்மை ஏற்படுவது குறைக்கப்படும். மூட்டு வலி போன்ற பிரச்சனை ஏற்படாது.
4. தினமும் 10,000 ஸ்டெப் நடந்தால் மனஅழுத்தம் குறையும். கவலைகள், மன இறுக்கங்கள் ஆகியவை நீங்கும்.
5. தினமும் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருவதால் ஜீரண தன்மை அதிகரிக்கும். வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
6. உடலில் குளூகோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் சர்க்கரை வியாதி ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
7. தினமும் முறையாக வாக்கிங் செல்வதால் உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும். மனதில் அமைதி அதிகரிக்கும்.
8. தினமும் 10,000 ஸ்டெப் நடப்பதால் இரவில் சீரான தூக்கம், தேவையான அளவு ஓய்வு ஆகியவை உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கிறது.
9. மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் நினைற்றல் பெருகும். மனம் ஒருமுகப்படும். கவனச்சிதறல் பிரச்சனைகள் குறையும்.