40 வயதைக் கடந்துவிட்டால் முட்டையைத் தொடக்கூடாது என்று சிலர் சொல்வர். இதற்கு அவர்கள் சொல்லும் பல காரணங்கள் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. 

ஒரு முட்டையில்...

77 கலோரிகள் உள்ளன. இதில், 6 கிராம் புரதம் உள்ளது. புரதமும், அமினோ அமிலமும் உடலின் செல் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. முட்டையில் இயற்கையாகவே, விற்றமின் பி 12, ரிபோபிளாவின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், இது அவசியம். உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு, 5 சதவீதம் முட்டையில் உள்ளது. 

கண்புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ இதில் உள்ளது.எலும்பு வளர்ச்சிக்கு தேவையான விற்றமின் D, தோலுக்கு தேவையான விற்றமின் E, ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சிக்கு ஆதாரமான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜிங்க் முட்டையில் உள்ளது. 

முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்புச் சத்து மட்டும், 90 சதவீதம் இருப்பதால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் முட்டையைத் தவிர்க்கச் சொல்கின்றனர். ஆனாலும், இந்த கொழுப்புடன் சேர்ந்து நிறைய நுண்ணுாட்டச்சத்துக்களும் உள்ளன. 

இதய நோய், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

காலை உணவில், தொடர்ந்து 8 வாரங்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்பது ஒரு சிலருக்கு பொருந்தும். நிறைய மசாலா, எண்ணெய் சேர்த்து முட்டையை சமைக்காமல், அப்படியே வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது. 

செல் சுவர்களை உருவாக்கும் மூளை வளர்ச்சிக்கு பயன்படும், கோலின் (CHOLINE) என்ற நுண்ணூட்டச்சத்தும் முட்டையில் உள்ளது. 

ஒரு மஞ்சள் கருவில், 185 மில்லி கிராம் கொழுப்பு சத்து உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 மில்லி கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

பெண்களும், குழந்தைகளும் தினமும் காலையில் ஒரு முட்டை அல்லது குறைந்தது வாரத்திற்கு, 5 நாட்கள் முட்டை அவசியம் சாப்பிட வேண்டும்