தலைவலியை குறைக்க சில பிரஷர் பாயிண்ட்ஸில் அழுத்தம் கொடுத்தால் போதுமானது.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பெரிய சவாலாக இருப்பது தலைவலிதான். தலைவலி வந்து விட்டாலே கூடவே மனநிலையும் அப்படியே மாறிவிடும். எந்த வேலையும் செய்ய முடியாது. யாரிடமும் சகஜமாக பேச முடியாது. வலியில் கோபத்துடனும் எரிச்சலுடன் காணப்படுவோம். இதற்கு நோயெதிர்ப்பு குறைவு காரணம் என சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் உள்ளன.
தலைவலியில் இருந்து நிவாரணம் பெற நம்மில் பலர் டீ/ காபி குடிப்பார்கள். ஆனால் எல்லா தலைவலிக்கும் டீயே நிவாரணமா? கிட்டத்தட்ட 150-க்கும் மேல் தலைவலி வகைகள் இருக்கின்றன. அதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். அதனை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தலைவலி எனலாம். இதற்கு வெறும் டீ/ காபி நிவாரணம் அல்ல. இந்தப் பதிவில் அதை எளிமையாக காணலாம்.
முதன்மை தலைவலி (Primary headache) முதன்மை பிரிவின் கீழ் வரும் தலைவலி ஆபத்தான நோய் அல்ல. இதில் தலைவலி மட்டுமே பிரச்சனையாக தெரியும். டென்சன், கோவம் போன்ற காரணங்களால் வரும் தலைவலிகள் இதில் அடங்கும். க்ளஸ்ட்டர் தலைவலி, மைக்ரேன், நியூ டெய்லி பெர்சிஸ்டெண்ட் தலைவலி (NDPH) ஆகியவை முதன்மை பிரிவில் வரும்.
இரண்டாம் நிலை தலைவலிகள் (Secondary headaches)
இந்த வகை தலைவலிகள் மற்ற உடல்நல பிரச்சனைகளுடன் தொடர்புடையது. கழுத்து காயங்கள், சைனஸ் போன்ற மற்ற மருத்துவ நிலைகளின் காரணமாக ஏற்படக் கூடியவை ஆகும். சில நேரங்களில் ஏதேனும் தீவிரமான நோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். மூளை ரத்த நாளங்களில் உள்ள பாதிப்பு, தலையில் ஏற்பட்ட காயம், உயர் ரத்த அழுத்தம், ஏதேனும் தொற்று, அதிக மருந்து பயன்பாடு, மூளையழற்சி, மூளையில் கட்டி போன்ற பல காரணங்களால் இந்த இரண்டாம் நிலை தலைவலிகள் வரலாம்.
நிவாரணம்
பொதுவாக மற்ற உடல் நல பிரச்சனைகளால் ஏற்படும் தலைவலி தீவிரமடைவதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும். சாதாரண தலைவலிக்கு வெறும் டீ குடிக்காமல் அக்குபிரஷர் மற்றும் பிரஷர் பாய்ண்ட்களை வைத்து அதை குணப்படுத்த முடியும்.
யூனியன் வேலி
யூனியன் வேலி (Union valley) என சொல்லப்பட்டும் பிரஷர் பாயிண்ட்ஸ் விரலில் தான் உள்ளது. கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலுக்கு கீழே அடிப்பகுதிக்கு மத்தியில் உள்ளது. தலைவலி வந்தால் நிவாரணம் பெற, முதலில் வலது கை ஆள்காட்டி விரல், கட்டைவிரலால், இடது கையின் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் உள்ள அந்த பாயிண்ட்டில் உறுதியாக அதே நேரம் வலிக்காமல் மிதமாக அழுத்துங்கள். அந்த இடத்தில் 4 முதல் 5 வினாடிகள் மசாஜ் செய்த பின் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து சுவாசியுங்கள். இதைப் போல இடது கைக்கும் செய்யுங்கள். இதை செய்தால் தலை, கழுத்து நரம்புகளில் இருக்கும் டென்ஷன் நீங்கும்.
தேர்ட் ஐ (Third eye)
தேர்ட் ஐ என்ற மூன்றாம் கண் பிரஷர் பாயிண்ட் புருவங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தல் அல்லது வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வதால் தலைவலி குறையும்.
ட்ரிலிங் பாம்பூ (Drilling bamboo)
இது சற்று வித்தியாசமான பிரஷர் பாயிண்ட். ஜோடியாக இருக்கும். புருவத்தின் உட்புறத்தில் மூக்கு பாலமும், புருவ எலும்பும் சந்திக்கும் பகுதியில் காணப்படுகிறது. தலைவலி வந்தால் 2 ஆள்காட்டி விரல்களாலும் இருபக்கமும் சம அழுத்தம் கொடுங்கள். 10 வினாடிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவிட்டு பின் இடைவெளி விடுங்கள். மறுபடி 10 வினாடிகள் அழுத்துங்கள். இதனால் கண் சோர்வு, சைனஸ் வலி, அழுத்தத்தால் வரு தலைவலி நீங்கும்.
கேட்ஸ் ஆஃப் கான்ஷியஸ்னஸ் (gates of consciousness)
முதுகெலும்பின் இருபக்கமும் காணப்படும் ஹாலோ ஸ்பேஸில், மண்டை ஓட்டின் அடிப்பகுதிக்குக் கீழ் பிரஷர் பாயிண்ட்ஸ்கள்உள்ளன. இரு கைகளின் ஆள்காட்டி, நடு விரல்களால் இங்கு நன்கு அழுத்தம் கொடுத்தால் இந்த புள்ளிகள் தூண்டப்படும். இதனால் கழுத்தில் ஏற்படும் டென்ஷன் தலைவலி நீங்கும்.
