தினமும் சாப்பிடும் முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலமாக இரத்த சர்க்கரையை இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்ட பின்னர் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதைக் கட்டுப்படுத்த சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லோருக்கும் சாப்பிட்டதும் நடக்கும் வாய்ப்பு அமைவதில்லை. இந்நிலையில் புதிய ஆய்வு தினமும் சாப்பிடும் முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலமாக இரத்த சர்க்கரையை இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளது.

உண்மையில் தண்ணீர் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை சிறா வைத்திருக்கும் உடலின் முக்கிய அமைப்புகளை இது ஊக்குவிக்கிறது. இந்த முறையை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களும், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைக்க நினைப்பவர்களும் பின்பற்றலாம்.

எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்?

சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தண்ணீர் குடிப்பது உங்களுடைய வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக செய்யும். இதனால் செரிமானம் தாமதமாகும். செரிமான கோளாறுகள் ஏற்படும் என்பது பலராலும் கருதப்படுகிற பொதுவான கருத்து. ஆனால் தண்ணீர் உடலில் உள்ள உணவை உடைக்கவும், செரிமானப் பாதையில் உணவை நகர்த்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தண்ணீர் குடிப்பது செரிமானத்தை எளிமையாக்கும் மாறாக பிரச்சனைகள் ஏற்படுத்தாது. ஆனால் அமில ரிஃப்ளக்ஸ் (GERD) அல்லது காஸ்ட்ரோபரேசிஸ் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்கள் சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது கஷ்டமாக இருக்கும். சிறுநீரகம் அல்லது இதய பிரச்சனைகள் இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க நினைத்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவர்களுக்கு அதிக தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் செயலாகும்.

எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?

பொதுவாக உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது. இதை சரியான முறையில் செய்ய வேண்டும். சாப்பிடும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது குறைந்த உணவு எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும். ஒரே நேரத்தில் அதிகளவு சாப்பிடுவதை தடுக்கிறது. நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருகவும் உதவும்.

சோடா, பழ ஜூஸ், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் தவிர்த்து வெறும் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். ஆனால் அளவாக குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்த தண்ணீரையும் குடிக்கக் கூடாது . சமநிலையுடன் இல்லாவிட்டால் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும்.

உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

பசியைக் கட்டுப்படுத்தும். உணவுக்குப் பின் உயரும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். செரிமானத்தை ஆதரவாக இருக்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் இதைப் பின்பற்றினால் பசி குறையும். அளவாக சாப்பிட உதவியாக இருக்கும்.