சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

இன்றைய நவீன மனிதர்கள், அவர்களின் தவறான வாழ்க்கைமுறையின் காரணமாகத்தான் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது என்கிறது, ‘இந்திய சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு. 

சர்க்கரை நோய் பற்றிய பயம் இருந்தாலும், போதிய விழிப்புஉணர்வு இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் 30 வயதுக்கு மேல்தான் வரும். அந்த நேரத்தில், உடல் எடையைக் குறைத்தல், கட்டுக்குள் வைத்திருத்தல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு என்று கவனமாக இருந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். 

மேலும் இந்த அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.

** அதிக தாகம்

சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறி, தாகம். வழக்கத்துக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். டாக்டர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்கள். 

நாமும் இப்போது நிறைய தண்ணீர் குடிக்கிறோமே என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. திடீரென்று நம்மையும் அறியாமல் அதிக தாகம் எடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கிறோம் என்றால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அதை வெளியேற்ற நம்முடைய சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதை ஈடு செய்வதற்காக, தாகம் அதிகரிக்கிறது.

** அடிக்கடி சிறுநீர் கழித்தல்

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை வெளியேற்ற, சிறுநீரகம் முயற்சிக்கும்போது, உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவு சிறுநீர் கழிக்கச் சென்றால், தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

** உடல் எடை குறைதல்

சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்றால், இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது அதன் செயல்திறன் போதுமான தாக இல்லை என்று அர்த்தம். செல்களுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை ரத்தத்திலேயே இருப்பதால், எந்தக் காரணமும் இன்றி உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கிறது.

** அதிகப் பசி

டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்திறன் குறைந்துவிடுகிறது. இதன் மூலம் செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கணையமானது இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது. 

இன்சுலின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, மூளைக்கு இன்னும் குளுக்கோஸ் தேவை உள்ளதாக சிக்னல் செய்கிறது. இதனால், பசி எடுக்கிறது.

** வாய் உலர்தல்

சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம். வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

** அதிகப்படியான சோர்வு

நம் உடலில் உள்ள செல்கள்தான் குளுக்கோஸைப் பயன்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. செல்களுக்கு போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்கவில்லை, நீர்ச்சத்தும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது எனில், உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், தலைவலியும் ஏற்படுகிறது.

** பார்வை மங்குதல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்ணில் ரெட்டினா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பார்வை மங்கலாகும். இவர்கள், சர்க்கரை நோய் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவதன்மூலம், ஆரம்பநிலையிலேயே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். 

காலில் மதமதப்பு அல்லது காலில் ஊசி குத்துவது போன்று சுறுக்சுறுக்கென வலி, காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்த பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் நமைச்சல், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டால் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.