Heart attack : குளிர்காலத்தில் பலவீனமாகும் இதயம்.. இந்த உணவுகளை தெரிஞ்சுக்கோங்க...
மழைக்காலத்தை போலவே குளிர்காலமும் நோய்கள் அதிகம் தொற்றும் காலமாகவே உள்ளது. ஒவ்வொரு பருவக்காலங்களிலும் உணவின் தேவை மாறுபடுகிறது. இதய பிரச்சனை உள்ளவர்கள் உண்ணக் கூடியவை குறித்து இங்கு காணலாம்.
குளிர்காலங்களில் இயல்பாகவே உடல் கூடுதல் சோர்வுடன் காணப்படுகிறது. காலையில் எழுந்து கொள்ளவே சோம்பேறித்தனம் ஏற்படும் அளவிற்கு இதமான காலமும் இக்காலம்தான். இந்தக் காலத்தில் எல்லோரும் உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றாலும், இதயம் தொடர்பான பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏன் குளிர்காலத்தில் கவனம்?
மற்ற காலங்களை விடவும் குளிர்காலத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இருமடங்கு அதிகமாக உழைக்கிறது, இதயம். இந்தக் காலத்தில் தமனிகள் சுருங்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு பக்கவாதம் ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆகவே, குளிர்காலங்களில் வெளியே செல்லும்போது அதிகமான அளவில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளையே கவனமாக அணிய வேண்டும்.
ஏனெனில் குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தைச் சீராக பராமரிப்பதற்காக இதயம் அதிகமாக வேலை செய்கிறது. நம்முடைய உடல் வெப்பம் நீண்டகாலம் 95 டிகிரிக்கும் கீழே இருக்கும் போது, நம் இதயத் தசைகள் சேதமாகவும் வாய்ப்புள்ளது. இதனை சில மிதமான உடற்பயிற்சிகள், உணவுகளின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சிட்ரஸ் பழங்களை கோடைக்காலங்களில் தான் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் குளிர்காலத்திலும் கூட அவற்றை எடுத்து கொள்ளுதல் நல்லது என தெரிவிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி, நெல்லி ஆகிய பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஃபிளாவனாய்ட்ஸ், வைட்டமின் சி ஆகியவை அடங்கியிருக்கும் லிப்போபுரோட்டீன் எனும் கொழுப்பு சத்து கிடைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
உடல் எடையும் ஓட்ஸூம்!
உடல் எடை இதய நோய்க்கு ஒரு காரணி என்பதால் தான் அதனை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அந்தவகையில், உணவில் மிதமான உணவுவகைகள் தான் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. ஓட்ஸ் உடல் எடையை கூட்டாமல், இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் ஜிங்க், நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயத்தையும் பராமரிக்க உதவுகிறது.
பழங்கள் மட்டுமின்றி தானிய வகைகளிலும் நார்ச்சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் செரிமானத்திற்கு ஏற்றவை. உடலில் செரிமானம் சீரான முறையில் நடைபெற குறிப்பிட்ட அளவிலான வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் தான் குளித்த பிறகு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் குளிர்காலங்களில் போதிய வெப்பம் உடலில் இல்லாத சூழ்நிலையில், முழு தானியங்களை உணவில் எடுத்துக் கொள்வதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கமுடியும். இதில் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. இன்றைய நவீன காலகட்டத்தில் நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளிலும் முழு தானிய வகைகள் கிடைக்கின்றன.
தானிய வகைகளை எடுத்துக் கொள்ளும்போது, வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளையும் கூடவே எடுத்து கொள்ளலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாக்கும்.
இதை செய்தால் நன்மைங்க!
அதிகம் எண்ணெய்யில் பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். அதிகமான அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கலாம் என்ற காரணத்தால் அந்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எளிதில் செரிமானம் ஆகும் வகையில் இறைச்சியைச் சமைத்து உண்ணுதல் அவசியம். குளிர்காலங்களில் கடினமான கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் கூட வீட்டினுள்ளேயே நடைப்பயிற்சி முதலிய எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.