பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று சமீபகாலமாக இணையத்தில் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மருத்துவர் சிவா சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

பழைய சாதம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா?

நமது அன்றாட உணவு முறையில் பழைய சாதம் என்பது தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறது. தென்னிந்தியா உட்பட பல பகுதிகளில் இதை பலரும் விரும்பி உட்படுகின்றனர். சமீப காலமாக பழைய சோறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்கிற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் பழைய சோறை சாப்பிட சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைப்பதில்லை. இருப்பினும் இதை ஒரு குறிப்பிட்ட முறையில் உண்ணலாம் என்று மருத்துவர் சிவா சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

பழைய சாதத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பழைய சோறு என்பது முதல் நாள் சமைத்த சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை கிடைக்கும் உணவாகும். இந்த புளிப்பு செயல்முறை அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைகளை நொதிகளால் உடைத்து லாக்டிக் அமிலம் மற்றும் பல நன்மை பயக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. இந்த பழைய சாதத்தில் லாக்டிக் அமில பாக்டீரியா போன்ற நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் உருவாகின்றன. புரோபயாடிக் என அழைக்கப்படும் இவை குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் வைட்டமின் பி6, பி12 ஆகியவற்றுடன், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளது. புளிப்பு செயல்முறை ஸ்டார்ச்சுகளை உடைப்பதால் எளிதில் செரிமானமாக கூடிய உணவாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் பழைய சாதத்தை இப்படி சாப்பிடலாம்

இது குறைந்த கிளைசீமிக் அளவைக் கொண்டுள்ளதால் ரத்த சர்க்கரை அளவை மெதுவாகவும் சீராகவும் உயர்த்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான மருத்துவ ஆதாரங்கள் குறைவு. கிளைசீமிக் குறியீடு குறைவு என்ற போதிலும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மருத்துவர் சிவா சுந்தர் கூறியுள்ள கருத்துக்களின் படி பழைய சாதத்தை கஞ்சியாக சாப்பிடாமல், தண்ணீர் ஊற்றாமல் அடுத்த நாள் சூடு செய்து குறைவான அளவில் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். HbA1C பத்துக்கு மேல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்ற அவர் கூறியுள்ளார். சர்க்கரை நோயாளிகள் முதல் நாள் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடு செய்து சாப்பிடுவது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.

சரிவிகிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

இவ்வாறு பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடு செய்து சாப்பிடும் பொழுது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். ஸ்டார்ச் ரெசிஸ்டன்ஸ் அதிகமாக இருக்கும். இதனால் இன்சுலின் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும். இது ஓரளவுக்கு இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் இன்ஃப்ளமேஷன்ஸ் குறைக்கப்படும். HbA1C அளவு 8-க்கு குறைவாக இருப்பவர்கள் தினமும் 150 கிராம் அளவிற்கு பழைய சாதத்தை எடுத்துக்கொள்ளலாம். வெறும் சாதத்தை மட்டும் சாப்பிடாமல் அதனுடன் புரதங்கள் நார்ச்சத்துக்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் காய்கறிகளுடன் முட்டை, சிக்கன், மீன், பன்னீர் போன்ற புரதங்களுடன் பழைய சாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.

150 கிராம் அளவு தினமும் எடுத்துக் கொள்ளலாம்

இதுபோல நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்களுடன் 150 கிராம் அளவு பழைய சாதத்தை உண்பவர்களுக்கு சர்க்கரை அளவு சீராகவே உயரும். ஆனால் வெறும் சோறை மட்டும் சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனடியாக உயரும். மேற்கூறிய அறிவுரைகளின் படி இந்த பழைய சாதத்தை சாப்பிடுவது உங்களுக்கு பலன்களைத் தரலாம். குடல் ஆரோக்கியம் மேம்படலாம் ஆனால் நீரிழிவை ரிவர்ஸ் செய்வதற்கு பழைய சோறு உதவும் என்பதற்கான எந்த வித ஆதாரமும் கிடையாது என்று டாக்டர் சிவா சுந்தர் தெளிவுபடுத்தி உள்ளார். பழைய சோறு சாப்பிடுவது மூலமாக இரத்த சர்க்கரையை முழுமையாக குணப்படுத்தி விடலாம் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். பழைய சோறு என்றாலும் அதில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

எந்த கார்போஹைட்ரேட் உணவும் சர்க்கரை அளவை அதிகரிக்கும்

எந்த கார்போஹைட்ரேட் உணவாக இருந்தாலும் அதனுடன் புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்த்து சரி விகிதத்தில் எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே ரத்தத்தில் அளவு சீராக உயரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே சரிவிகித உணவு முறையை கடைபிடிக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த தகவல்கள் அனைத்துமே தகவல் நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது மருத்துவர் சிவா சுந்தரின் instagram பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை அடிப்படையாகக் கொண்டது. இதன் உண்மைத் தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பு இருக்காது.