Asianet News TamilAsianet News Tamil

நெடுந்தூர பயணத்தின்போது குமட்டல்,  தலைவலி வருகிறதா? இதனை தவிர்க்க இதுதான் தீர்வு...

Does the nausea and headache come on a long journey? This is the solution to avoid ...
Does the nausea and headache come on a long journey? This is the solution to avoid ...
Author
First Published Apr 16, 2018, 1:40 PM IST


கார், பேருந்து, விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படுவது இயற்கை. 

இவ்வாறு, பயணிக்கும்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி போன்ற உணர்வை ‘மோஷன் சிக்னெஸ்’ என்று குறிப்பிடுகின்றனர். நகர்வின் போது ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உணர்வு உறுப்புகள் ஏற்றுக்கொள்ள இயலாமல் இவ்வாறான உடல் சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த பிரச்னை ஏற்படும்போது, சிலர் பயணத்தை ரத்து செய்துவிடும் அளவுக்கு கொண்டுசென்றுவிடும். 

நெடுந்தூர பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் மற்றும் உடல் சுகவீனத்தை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்….

1.. அருகிலுள்ள பொருட்களை பார்ப்பதை தவிர்த்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, பயணத்தின்போது சிறிய பொருட்களை உன்னிப்பாக பார்ப்பதையும் தவிர்க்கவும். குறிப்பாக, புத்தகம் படிப்பதும் இந்த பிரச்னைக்கு வழிகோலும்.

2.. சிலருக்கு பெட்ரோல், டீசல் வாடை மற்றும் சில கெட்ட வாடையை நுகர்ந்தாலே, பயணத்தின்போது குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். இதற்கு ஏசி.,யை போட்டுச்செல்வது ஒரு உபாயமாக இருக்கும். இல்லையெனில், கெட்ட வாடை இல்லாத இடங்களில் இயற்கை காற்றை சுவாசிப்பது பலனை தரும்.

3.. திருமண விழா அல்லது விசேஷங்களில் பங்கேற்றுவிட்டு நீண்ட தூரம் பயணிக்கும்போது, சிலருக்கு இவ்வாறு பிரச்னை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் வழியில் ஏதேனும் தங்கும் விடுதியில் சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் புறப்படுவது பல பிரச்னைகளை தீர்க்கும்.

4.. பயணத்தின்போது மூச்சு முட்ட சாப்பிடாமல், அரை வயிறுக்கு சாப்பிடுவதும் இந்த குமட்டல் உணர்விலிருந்து விடுபட உதவும். கார உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், சாப்பிடாமல் இருந்தாலும் வெறும் வயிற்றில் இந்த உணர்வு வரும். அத்துடன், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம். உடலில், நீர்சத்து குறைந்தாலும் இந்த பயணத்தின்போது உடல் சுகவீன பிரச்னை ஏற்படும். எனவே, அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியம்.

5.. பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் முன்புறம் நோக்கியே இருக்கைகளில் அமர்வது அவசியம். ரயில், பஸ்களில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாலும் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

6.. அமைதியாக செல்லாமல், உடன் வரும் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே செல்வதன் மூலமாக இந்த பிரச்னையை சமாளிக்கலாம். அதாவது, கவனத்தை மாற்றிக்கொண்டு இந்த பிரச்னையை தவிர்க்க முயல்வதும் ஒரு உபாயம்தான். கார் என்றால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு, ஓட்டுபவருடன் பேசிக்கொண்டு செல்லலாம்

7.. பயணத்திற்கு முன்பாக அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் உடலை பரிசோதனை செய்துகொள்வதுடன், இந்த பிரச்னையை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் பெற்றுச் செல்லவும். பயணத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக சிறிது நேரம் தியானம் செய்து புறப்படும்போது இந்த பிரச்னையை சமாளிக்க உதவும்.

8.. சிலருக்கு ஏசி அதிகமாக இருந்தாலும் தலைவலி, குமட்டல் ஏற்படும். ஏசி.,யை குறைத்து வைத்து செல்வதும், வெளிக்காற்றை சுவாசிப்பதும் இதற்கு தீர்வு தரும். பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் சிறிய இஞ்சி துண்டை மென்று தின்றால் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதேபோன்று, எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு நுகர்ந்தாலும் பலன் தரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios