மூட்டு வலி. இன்று பலரையும் அவதிப்படுத்துவது.

மூட்டு வலியின் இரு வகைகள்:

மூட்டு அழற்சி, முடக்கு வாதம் என்று இரு வகைப்படுகிறது.

மூட்டு அழற்சி

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்கு வாதம்

இது எந்த வயதினருக்கும் வரலாம். இது பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டு வலி அவதியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகள்

* நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி, ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிய உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும.

* ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

* இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினமும் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

* வெதுவெதுப்பான தேங்காயெண்ணை அல்லது கடுகெண்ணையில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வலி இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டு வலிக்கு உடனடித் தீர்வாகும்.

* ‘குதிரை மசால்’ எனப்படும் கால்நடைத் தீவனத்தின் விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு கோப்பை நீரில் கொதிக்கவைத்து, தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை அருந்தலாம்.

* இரண்டு மேஜைக் கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி, ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலை யில் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும்.பின் மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தைச் சாப்பிடும்போது காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டு, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

* ஒரு மேஜைக் கரண்டி பச்சைப் பருப்பு அல்லது பாசிப் பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேக வைத்து ‘சூப்’பாக நாளன்றுக்கு இரு முறை சாப்பிட வேண்டும்.

* வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும்.

* காய்கறி ‘சூப்’ அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

* கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

* காரமான வறுத்த உணவுகள், டீ, காபி, பகல் தூக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மனக் கவலை, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.