சிறுவர்களுக்கும் இளம் வயதினருக்கும் ஏற்படும் நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். காரணைம் 40 வயது கடந்து ஏற்படும் நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்பொழுது இளவயதில் ஏற்படும் நீரிழிவு நோயின்போது இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும் வீதமும் உடல்பாதிப்பு வீதமும் அதிகம். 

இதன் காரணமாகவே இளவயது நீரிழிவு நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டி இருக்கினறன.

நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைக்கட்டுப்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பது சம்பந்தமாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி நீரிழிவு நோயின் ஆரம்பகால கட்டுப்பாடே அதிக முக்கியமானது என்பது தெரிய வந்திருக்கின்றது. 

நீரிழிவுநோய் தோன்றிய ஆரம்ப காலத்தில் இது சிறந்த முறையிலே முற்றாகக் கட்டுப் படுத்தப்படுமாயின் இதன் அனுகூலங்கள் பல்லாண்டு காலம் நீடிப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்துவரும் காலங்களில் நீரிழிவு நோயின் கட்டுப்பாடு குறைவாக இருந்தாலும் ஆரம்பநிலைக் கட்டுப்பாட்டின் அனு கூலங்கள் தொடர்வது ஒரு புதுமையான நிகழ்வாகும். இதனை மெற்றாபோலிக்மெமறி என்று சொல்லுவார்கள்.

நீரிழிவுநோயின் ஆரம்ப கட்டத்திலே கவனக்குறைவாக இருந்துவிட்டு நோய் கடுமையடைந்த பின்னர் மருந்தெடுக்க நினைக்கும் ஒரு மனோநிலையையே காணமுடிகின்றது. இதன் காரணமாகவே எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இளம் வயதினரும் தற்பொழுது அதிகளவில் நீரிழிவு நோய் ஏற்பட்டு வருவதால் இதனை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதற்கு அனைத்து இளம் வயதினரும் குருதி குளுக்கோசின் அளவைச் சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை ஏழுந்திருக்கிறது.

12 வயது கடந்த அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருதடவையாவது குருதி குளுக்கோசின் அளவைச் சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. எனவே 12வயது கடந்த அனைவரும் ஒரு தடவையேனும் தமது குருதி குளுக்கோசின் அளவை சோதித்துப்பார்க்க வேண்டும். 

அது அதிகரித்துக் காணப்படின் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆரம்ப முதலே இதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போமாயின் நோயின் தாக்கமின்றி சாதாரண வாழ்க்கை வாழமுடியும்.