வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை. இது மலேசியாவில் தோன்றியதாகும். இது இந்தியா, இந்தோனசியா ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரணசக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. புகையிலை , பாக்குடன் வெற்றிலை உண்பது தீயபழக்கம். வெற்றிலை வலியைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக்கட்டி வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும். 

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். நெஞ்சுசளி கரைந்து மலத்தோடு வெளியேறும். திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்புநோய், நெஞ்சுச்சளி இருமல் குணமாகும்.

வெற்றிலையை அரைத்து வாதம், விரை வாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாககட்டினால், வீக்கமும், வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலைச் சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து குடித்தால் சுவாச கோளாறுகள் குணமாகும். அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவகுணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது. வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெது வெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும். 

இரவு தூங்கச் செல்லும் முன்பு, 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்து வர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும். வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட வேண்டும். 

விரைவில் அந்த புண் குணமாகும். வெற்றிலைச்சாறு 5மி.லி.யுடன் இஞ்சிச்சாறு 5 மி.லி.கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது. வயிற்று வலி நீங்க 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மை போல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி, சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். மந்தம் குறையும்.

டைபாய்டு , காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கூட இவற்றுக்கு உண்டு. சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது. புத்துணர்ச்சி தருகிறது. வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது. 6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால், ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம். வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த் தொற்றுகளை தடுக்குமாம். 

மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது. பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும். வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக் குணமாக்கும். வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து.