வீட்டிலிருந்தே நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலை செய்யும் போது கழுத்து வலி பிரச்சனை ஏற்படும். இந்த வலியை குணமாக வீட்டில் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யுங்கள்.

தற்போது நிறைய பேர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அலுவலகம் சென்று வேலை பார்த்தால் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்துவிடலாம். ஆனால் ஒர்க் ப்ரம் ஹோமில் அப்படியல்ல. நாள் முழுவதும் ஒரே இடத்தில் மடிக்கணினி முன் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். இவ்வாறு ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் போது முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதே பிரச்சினையை நீங்களும் அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் சில யோகாசனங்களை தினமும் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கழுத்து வலி குணமாகும்.

கழுத்து வலியை போக்க யோகாசனங்கள் :

1. புஜங்காசனம் :

இந்த ஆசனம் கழுத்து வலியை குணமாக்கி கழுத்தை வலிமையாக்குவது மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் அனைத்து பாகங்களும் சீராக செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு குப்புறப் படுத்து உள்ளங்கைகளை மார்புக்கும் தோள்பட்டைக்கும் பக்கவாட்டில் தரையில் வைக்கவும். தலை, மார்பு, வயிற்று பகுதியை மெல்லமாக தரையில் இருந்து உயர்த்தி பாம்பு படை எடுப்பது போல முதுகை வளைக்கவும். சில நொடிகள் கழித்து பிறகு மூச்சை வெளி விட்டபடி பழைய நிலைக்கு திரும்பவும். நாள் முழுவதும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ச்சியாக செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

2. பச்சிமோத்தாசனம் :

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனங்களில் இதுவும் ஒன்றாகும். இது தரையில் அமர்ந்தபடி கால்களை நேராக நீட்டி இடுப்பை முன்னோக்கி குனிந்து கைகளால் கால் விரல்களைப் பிடித்து நெற்றி அல்லது முகத்தை முழங்கால்களுடன் சேர்க்கவும். இந்த ஆசனமானது நரம்பு மண்டலத்தை சீராக செயல்படுத்தும். இதனால் கழுத்து வலி தோள்பட்டை வலி நீங்கும்.

3. பாலாசனம் :

இதுவும் நாம் அனைவரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆசனமாகும். குழந்தை குப்புறப் படுத்திருப்பது போல இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த ஆசனம் செய்யும் போது தோள்பட்டை, கழுத்து முதுகு தண்டு பகுதிகளில் ஏற்படும் வலி குறையும். இந்த ஆசனத்தை தொடர்ச்சியாக செய்து வந்தால் நாள்பட்ட கழுத்து வலி சரியாகும்.

4. மர்ஜாரியாசனா (cat cow pose) :

மர்ஜாரியாசனா என்பது முதுகை வளைத்து செய்யும் ஆசனமாகும். செய்வதற்கு தரையில் மண்டியிட்டு கைகளை தோல்களுக்கு நேராகவும், முழங்கால்கள் இடுப்புக்கு நேராகவும் வைக்கவும். மூச்சை உள்ள இழுத்து வயிற்று பகுதியை தரையை நோக்கி தளர்த்தி முதுகை கீழ்நோக்கி வளைக்க வேண்டும். தலையை மெல்லமாக மேலே தூக்கவும். பிறகு மூச்சை வெளியேற்றவும் முதுகை மேல்நோக்கி வளைத்து வயிற்றுப் பகுதியில் உள்ளே இழுக்க வேண்டும். தலையை கீழ்நோக்கி குனிந்து கன்னத்தை மார்போடு ஒட்டி வைக்க வேண்டும். கழுத்துவலி பிரச்சனையை தீர்க்க இந்த ஆசனம் உதவும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

5. சலபாசனம் :

இந்த ஆசனம் செய்ய குப்புப்படுத்து கைகளை உடலோடு ஒட்டி உள்ளங்கைகளை தரையில் நோக்கி வைக்க வேண்டும். தலையை தரையில் வைத்து மூச்சை ஆழமாக உள்ளிழுத்து ஒரே நேரத்தில் தலை, மார்பு, கால்கள், கைகள் மூன்றையும் மெதுவாக தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழங்கால்களை நேராக வைத்திருக்க வேண்டும் கால் விரல்கள் நீட்டி இருக்கவும். தோள்களை தளர்வாக வைத்திருக்கவும். ஒரு சில வினாடிகள் இந்த நிலையில் மூச்சை பிடித்து பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை வெளியேற்றவும். பிறகு இயல்பு நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் செய்தாலே போதும். ஒட்டுமொத்த உடல் வலியும் நீங்குவதோடு கழுத்து வலி பிரச்சனையும் தீரும்.

ஆகவே, மேலே சொன்ன இந்த ஐந்து ஆசனங்களில் ஏதேனும் மூன்றை செய்து வந்தால் நீண்ட கால கழுத்து வலி பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.