பெண்கள் தங்களுடைய கணவனிடம் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Seven Things Women Expect From Their Husbands : பொதுவாகவே பெண்கள் ஆண்களை காட்டிலும் உணர்ச்சிகள் அதிகம் கொண்டவர்கள். தங்கள் மீதான பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படையாக கூறுவது, உரையாடுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவை பல பெண்களுக்கும் பிடித்தமானதாகும். பெரும்பாலான பெண்கள் சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியாகக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சில பெண்களிடம், 'ஏன்டி அவனை காதலிக்குறனு கேட்டால், அவன் தைரியமானவன்' என சொல்வார்கள். 'உன் கணவன் எதில் பெஸ்ட்னு கேட்டால், எனக்கு ஒன்னுன்னா துடிச்சுடுவார்' என்பார்கள். ஏனென்றால் தங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் ஆண்களை போலவே பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களும் பெண்களுக்கு பிடித்தமானவர்கள். இந்தப் பதிவில் பெண்கள் தங்களுடைய கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை காணலாம்.

கவனித்தல்

ஒரு மனைவி தான் பேசும்போது எந்த இடையூறும் இல்லாமல் கணவன் அதை கேட்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பாள். தான் சொல்வதைக் கணவர் கேட்டு கொண்டிருக்கிறார் என்பது அவளுக்கு மனதிற்கு மிகவும் இன்பமாக இருக்கும். கணவன் தான் பேசும்போது கேட்க வேண்டும் என்பதுதான் பெண்களின் முதல் எதிர்பார்ப்பு.

குட்டி பரிசுகள்

கணவனிடம் மனைவி சின்ன பரிசுகளை எதிர்பார்ப்பார். பெரிய பொருள்களாக கொடுப்பதை விடவும் அவர்கள் தேவையறிந்து குட்டி பொருள்களாக கொடுத்தாலும் கூட அது சிறந்ததுதான். உங்கள் மனைவி உங்களிடம் செருப்பு வாங்கி கேட்டால், அதை அவர்களே 100 முறை நியாபகப்படுத்தும்படி வைக்கக் கூடாது. நீங்களே வெளியே கூட்டி சென்று வாங்கி தரவேண்டும். இது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

சிறு தொடுதல்

தங்களிடம் உணர்வுரீதியாக கணவன் நெருக்கத்தில் இருப்பதை மனைவி விரும்புவாள். சின்ன சின்ன தொடுதல், அன்பான முத்தம், அரவணைப்பு போன்றவை பெண்களுக்கு பிடிக்கும். பொது இடங்களில் கை பிடித்தபடி நடப்பது, அவர்கள் இரவில் சோர்வாக இருந்தால் ஆறுதலாக பேசி தலை கோதிவிடுவது போன்றவை அக்கறையை வெளிப்படுத்தக் கூடிய செயல்கள்.

சுதந்திரம்

சுந்தரம் என்பது பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பதல்ல. எப்படி ஒரு ஆண் சுதந்திரமான முடிவு எடுக்கிறானோ அதை போலவே பெண்களும் சொந்தமாக முடிவெடுக்கவே விரும்புவார்கள். ஒரு பெண் தனக்கான நேரத்தை ஒதுக்குதல், தன் லட்சியத்திற்கான பாதையை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றில் தலையிடாமல் அவருக்கு உறுதுணையாக இருக்கும் மனப்பக்குவம் கணவருக்கு இருக்க வேண்டும் என பெண் எதிர்பார்ப்பாள்.

லட்சியங்களுக்கு துணைநிற்றல்

பெண்களை பொறுத்தவரை வார்த்தைகளை விட செயல்களை நம்பக் கூடியவர்கள். உன் லட்சுயத்திற்கு நான் துணை நிற்கிறேன் என சொல்லிவிட்டு அதற்கான பயணத்தில் கொஞ்சமும் பங்கு கொள்ளாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எந்த லட்சியத்தை அடைய போராடுகிறார்களோ அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் சோர்ந்து போனால் உற்சாகப்படுத்த வேண்டும்.

உதவுதல்

வீட்டு வேலைகளில் அவ்வப்போது கணவர் தனக்கு உதவுவதே பெண்கள் விரும்புவார்கள். பெரிய வேலைகளை செய்யாவிட்டாலும் சிறு சிறு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மனைவி சோர்வாக இருக்கும் போது அவருக்கு தேநீர் தயாரித்து தருதல் போன்ற விஷயங்களை செய்தாலும் கணவன் தன் மீது அக்கறையாக இருக்கிறார் என பெண்களின் மனதை ஆனந்தமாக்கும்.

பாராட்டுக்கள் தேவை!

உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் ஒரு மனிதனை இன்னும் வளர்த்தெடுக்கும். சிறு முயற்சிகளாக இருந்தாலும் அவற்றை பாராட்டும் போது இன்னும் கூட அதிகமாக முயல ஒரு உத்வேகம் வரும். அந்த வகையில் தங்களுடைய முயற்சிகளை கவனித்து அதை பாராட்டவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் உங்கள் மனைவியுடைய முயற்சிகளை எந்த போலித்தனங்களும் இல்லாமல் அங்கீகரிக்கும்போது அது அவர்களை உற்சாகப்படுத்தும்.

இந்த விஷயங்களை நீங்கள் செய்யும் போது நிச்சயமாக உங்களுடைய மனைவி உங்களிடம் நடந்து கொள்ளும் முறை மாறுபடும். உங்களுடைய உறவு முன்பை விட இன்னும் நெருக்கமாகும்.