Asianet News TamilAsianet News Tamil

Veg Leg Piece : குழந்தைகளுக்கான "வெஜ் லெக் பீஸ்" செய்து சாப்பிடுங்கள்!

வாருங்கள்! சத்தான வெஜிடேபிள்ஸ் லெக் பீஸ்ஸை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Vegetable Leg Piece in Tamil
Author
First Published Dec 30, 2022, 9:36 AM IST

இன்றைய நவீன மற்றும் இயந்திர உலகத்தில் வளரும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் இருந்து,உடுத்தும் உடைகள், சாப்பிடும் உணவுகள் என்று அனைத்திலும் புதுமையை விரும்புகின்றனர். அந்த வகையில் இன்று நாம் அவர்களுக்கு பிடித்த அதே வகையில் சற்று புதுமையாக ரெசிபியை காண உள்ளோம்.

வழக்கமாக நாம் சிக்கன் லெக் பீஸ், மட்டன் லெக் பீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வெஜிடேபிள்ஸ் வைத்து ருசியான லெக் பீஸ் செய்ய உள்ளோம்.  வெஜிடேபிள்ஸ் வைத்து சூப், பிரியாணி, குருமா என்று செய்யாமல் முற்றிலும் மாறுபட்ட, புதுமையான மேலும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ரெசிபி செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

வாருங்கள்! சத்தான வெஜிடேபிள்ஸ் லெக் பீஸ்ஸை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பீன்ஸ்-100 கிராம் 
கேரட்-100 கிராம் 
முட்டை கோஸ் -100 கிராம் 
உருளைக்கிழங்கு-1/4 கிலோ 
கேப்ஸிகம்-1 வெங்காயம்-2 
இஞ்சி பூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன் 
மைதா-1 கப்
பிரெட் க்ரம்ஸ் - 1 கப் 
மல்லித்தூள்-2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன் 
மிளகாய் தூள்- 2 ஸ்பூன் 
சீரகத்தூள்-2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்-1 ஸ்பூன் 
கார்ன் பிளார்- 2 ஸ்பூன் 
ஐஸ் க்ரீம் ஸ்டிக்-10
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு 

செய்முறை:

முதலில் காய்கறிகளை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் பீன்ஸ்,கேரட், கேப்ஸிகம் மற்றும் கோஸ் ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு குக்கரில் உருளைக்கிழங்கினை போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்த கிழங்கினை மசித்து தனியாக ஒரு கிண்னத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்த பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பின் இஞ்சி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரையில் வதக்கி விட வேண்டும். பின் அதில் அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு, பின் அதில் மசாலா தூள்களை சேர்த்து கொஞ்சம் கிளறி விட வேண்டும். பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

அனைத்து காய்கறிகளும் நன்றாக வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு,கலவை ஆறிய பிறகு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு கட்லெட் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மிக்ஸ் செய்த காய்கறி கலவையினை கையில் கொஞ்சம் எடுத்து நீட்ட நீட்டமாக பிடித்து ஐஸ் க்ரீம் ஸ்டிக் சொருகி வைத்து விட வேண்டும். 

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைசல் செய்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் பிரெட் க்ரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்பு அதில் காய்கறி லெக் பீஸ் ஸ்டிக்கினை ஒவ்வொன்றாக எடுத்து மைதா மாவு கரைசலில் டிப் செய்து , பின் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து , கடாயில் போட வேண்டும்.

அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துலெக் பீஸ்ஸின் 2 பக்கமும் சிவக்குமாறு பொரித்து எடுத்தால் ருசியான வெஜ் லெக் பீஸ் ரெடி!

இதனை டொமேட்டோ கெட்ச் அப் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios