ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் டொமேட்டோ கெட்சப்!
வாருங்கள்! ருசியான டொமேட்டோ கெட்ச் அப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மன்ச்சூரியன், கட்லெட், நூடுல்ஸ் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடும் டொமேட்டோ கெட்ச் அப்பை பெரும்பாலும் நாம் அனைவரும் கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைத்து இருப்போம். ஆனால் அதை மிக சுலபமாக வீட்டிலேயே மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.
வீட்டில் செய்வதால் குறைவான நேரத்தில், அதிகமாகவும் செய்யலாம்.ஒரு முறை செய்து இதனை பக்குவமாக ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மேலும் இதனை பல விதமான ரெசிபிகளுக்கும் வைத்து சாப்பிடலாம்.
வாருங்கள்! ருசியான டொமேட்டோ கெட்ச் அப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
டொமேட்டோ கெட்ச் அப் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி - 10 பழுத்தது
சர்க்கரை - 2ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
லவங்கம் - 6
பட்டை - 1 இன்ச்
உப்பு - 1ஸ்பூன்
செய்முறை :
முதலில் பழுத்த தக்காளியை நன்றாக அலசி விட்டு பின் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் மிளகு, லவங்கம் பட்டை மற்றும் நறுக்கிய தக்காளி போட வேண்டும். பின் கடாயை ஒரு தட்டு போட்டு மூடி விட்டு, சுமார் 1/2 மணி நேரம் வரை வேக விட வேண்டும். தக்காளி நன்றாக வெந்த பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பிறகு, 1 மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொண்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பேஸ்டினை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் அல்லது பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில், வடிகட்டிய பேஸ்டினை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்த பிறகு , இதில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை போட்டு கிளறி விட வேண்டும்.
டொமேட்டோ கெட்சப்பின் நிறம் வந்த பிறகு அதில் வினிகர் சேர்த்து கிளறி விட வேண்டும். கெட்சப் கெட்டியாக மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் டொமேட்டோ கெட்சப் ரெடி!
ஆறிய பிறகு ஒரு க்ளாஸ் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மாற்றிக் கொண்டு பிரிட்ஜ்ஜில் வைத்தால் 1 மாதம் வரை பயன் படுத்தலாம் .