நீரழிவு நோயினை கட்டுப்படுத்த சிவப்பரிசி பாயசம்!
சிவப்பரிசி வைத்து ருசியான பாயசம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய நவநாகரீக உலகத்தில் நம்மில் அதிகமானோர் அதிக உடல் எடை, நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு போன்ற பல வகையான நோய்களால் அவதிப்படுகிறோம். இதனை கட்டுப்படுத்த மருந்து , மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், நாம் உண்ணும் உணவுகள் மூலம் இவற்றை எல்லாம் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
அந்த வகையில் நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசியை கொண்டு செய்யப்படும் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தை காண முடியும். சிவப்பரிசி வைத்து புட்டு, இட்லி, இடியாப்பம் போன்ற பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.
சிவப்பரிசியானது வளரும் குழந்தைகளுக்கு நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது. மேலும் இரத்த கொதிப்பு நோயினையும் கட்டுக்குள் வைக்க பயன்படுகிறது. இது தவிர பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
இன்னும் பல விதங்களில் மனித குலத்திற்கு நன்மை அளிக்கும் சிவப்பரிசி வைத்து ருசியான பாயசம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
பொடித்த நட்ஸ்-2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
டேட்ஸ் சிரப் - தேவையான அளவு
Weight Gain: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்: அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு முறை அலசி பின் அதில் தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊறிய சிவப்பரிசியை ஒரு குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
விசில் அடங்கிய பிறகு, அரிசியை ஆற வைத்துக் கொண்டு, பின் மிக்ஸி ஜாரில் மாற்றி கொர கொரவென அரைத்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி, பிஸ்தா போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் பால் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது நெய் சேர்த்து அரைத்த அரிசி மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் ஊற்றி, பொடித்த நட்ஸ்களை சேர்த்து வறுத்துக் கொண்டு பாயசம் உள்ள கலவையில் சேர்த்து விட்டு , பின் அதில் ஏலக்காய் தூள் மற்றும் டேட்ஸ் சிரப் ஊற்றி மீண்டும் கலந்து விட்டு 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சுவையான, ஆரோக்கியமான சிவப்பு அரிசி பாயாசம் ரெடி!