கிராமத்து மண் வாசனையில் சுவையான "வெந்தய குழம்பு"!
கிராமத்து சுவையில் ருசியான வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான சைவ பிரியர்கள் வத்தக் குழம்பு, வெந்தய குழம்பு போன்றவற்றை மிக அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றி, தொட்டுக் கொள்ள ஒரே ஒரு அப்பளம் வைத்து சாப்பிட்டால் வேறு எதுவும் தேவையில்லை. இதன் ருசியோ தேவாமிர்தமாக இருக்கும் என்று உச்சு கொட்டி சாப்பிடுவார்கள்.
வழக்கமாக ரசம், பருப்பு, சாம்பார் போன்றவற்றை செய்து அலுத்து விட்டவர்களுக்கு இப்படி ஒரு முறை கிராமத்து சுவையில் வெந்தய குழம்பை செய்து பார்க்கலாம். இந்த குழம்பை ருசித்தவர்கள் இதனை அடிக்கடி செய்யுமாறு அன்பு கட்டளையிடுவார்கள். வாருங்கள்! கிராமத்து சுவையில் ருசியான வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு :
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
தனியா- 1 ஸ்பூன்
மிளகு- 1/2 ஸ்பூன்
வெந்தயம்- 2 ஸ்பூன்
வர மிளகாய்-8
நல்லெண்ணெய்-தேவையான அளவு
குழம்பு செய்வதற்கு:
புளி கரைசல்- எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
கடுகு -1 /4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள் தூள் -1 /4 ஸ்பூன்
பெருங்காயதூள் -1/4 ஸ்பூன்
அரைத்த மசாலா
வெல்லம்-1 /2 ஸ்பூன்
நல்லெண்ணெய்- தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
Weight Gain: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்: அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!
செய்முறை :
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் புளி எடுத்து தண்ணீர் ஊற்றி, புளிக் கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் மிளகு , கடலைப்பருப்பு மற்றும் தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, குளிர வைத்து பின் மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொது ஒரு மண் சட்டி கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, அதில் கடுகு, வெந்தயம் மற்றும் கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர், அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். தக்காளி வதங்கிய பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது புளிக்கரைசல் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு கொதித்து கொஞ்சம் கெட்டியாக வரும் போது சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும்.அவ்ளோதான் ! கிராமத்து ஸ்டைலில் ருசியான வெந்தய குழம்பு ரெடி!