Asianet News TamilAsianet News Tamil

அனைவருக்கும் ஏற்ற ரைட் சாய்ஸ்- க்ரிஸ்பியான தோசை!

மொறுமொறுவென சத்தான கோதுமை தோசையை வீட்டில் சுலபமாகவும்,சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Crispy Wheat Dosai in Tamil
Author
First Published Nov 20, 2022, 11:07 AM IST

வழக்கமாக கோதுமை மாவை வைத்து சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம் .நம்மில் பலரும் பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிடும் அளவிற்கு கோதுமை மாவு தோசையை விரும்பி சாப்பிட மாட்டோம். 

ஆனால் இந்த மாதிரி கோதுமை தோசையை மொறுமொறுவென செய்து கொடுத்தால்,பிடிக்காது என்று சொன்னவர்கள் கூட வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். குறைந்த நேரத்தில், நிறைந்த சுவையில் வீட்டிலிலேயே சூப்பரான கோதுமை தோசையை காய்கறிகளை சேர்த்து செய்து சாப்பிடலாம் வாங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கோதுமை தோசையை இப்படி செய்து பாருங்கள். மொறுமொறுவென சத்தான கோதுமை தோசையை வீட்டில் சுலபமாகவும்,சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

ஆந்திரா ஸ்டைல் "புடலங்காய் பச்சடி" செய்யலாமா?

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1.5 கப் 
அரிசி மாவு-1 கப் 
ரவை-1/2 கப் 
தயிர்-2 ஸ்பூன் 
கேரட்-1 (துருவியது)
வெங்காயம்-1(பொடியாக நறுக்கியது)
கேப்ஸிகம்-1/2 (பொடியாக நறுக்கியது)
கோஸ் -50 கிராம் (பொடியாக நறுக்கியது)
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ரவையை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் வெங்காயம்,கோஸ்,கேப்ஸிகம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை தோல் சீவி விட்டு, அதனை துருவி ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது  ஊறிய ரவையை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். பின் அதே பாத்திரத்தில்
கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் தயிர் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்து தோசை பதத்திற்கு மாவினை ரெடி செய்து கொள்ள வேண்டும். 

இப்போது தோசை மாவினுள் பொடியாக அரிந்த வெங்காயம், கேப்ஸிகம், கோஸ் மற்றும் துருவிய கேரட் சேர்த்து, பின் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொண்டு நன்றாக கலந்து விட வேண்டும். அரை மணி நேரம் மாவினை அப்படியே வைத்து விட வேண்டும்.

அரை மணி நேரம் சென்ற பிறகு, அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து, சிறிது எண்ணெய் தடவி, விட்டு, தோசைக் கல் சூடான பின், மாவினை தோசையாக ஊற்றி விட்டு, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து பின் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மொறு மொறுவென கோதுமை தோசை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios