ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு இதை செய்து பாருங்க- கமகமவென இருக்கும் கம்பு புட்டு!
கம்பு மாவை சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சத்தான சுவையான புட்டை எளிமையாகவும் , சுவையாகவும் எப்படி வீட்டில் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலம் காண உள்ளோம்.
சிறு தானியங்களில் ஒன்றான கம்பை வைத்து பலரும் கஞ்சியை தான் செய்வார்கள். ஆனால் இன்று நாம் கம்பு வைத்து ஒரு அருமையான சிற்றுண்டியை செய்ய உள்ளோம்.
வழக்கமாக நாம் அரிசி மாவு, ராகி மாவு அல்லது கோதுமை மாவு வைத்து தான் புட்டு செய்வோம். இன்று நாம் சிறுதானியமான கம்பு மாவை சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சத்தான சுவையான புட்டை எளிமையாகவும் , சுவையாகவும் எப்படி வீட்டில் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலம் காண உள்ளோம்.
கம்பு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு - 1/2கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 டம்ளர்
ஏலக்காய் தூள் - 4
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிது
சர்க்கரை நோயினை விரட்ட , ஆரோக்கியமான "ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்"!
செய்முறை:
முதலில் கம்பை கல் இல்லாமல் சுத்தம் செய்து ,பின் அதனை தண்ணீரில் அலசி,நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து , கடாய் சூடான் பின் அதில் உலர்த்தி வைத்துள்ள கம்பினை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வருது எடுத்துக் கொண்டு, ஆறிய பிறகு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும் .
பின் பெரிய தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் கம்பு மாவினை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு மாவில் வெதுவெதுப்பானை நீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து , புட்டு பதத்திற்கு மாவினை ரெடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது , இட்லி தட்டில் ஒரு நனைந்த காட்டன் துணியை போட்டு,மாவினை பரப்பி போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு ,இட்லி பாத்திரத்தை திறந்து , இட்லி தட்டில் இருக்கும் புட்டினை ஒரு பாத்திரத்தில் மாற்றி , சூடாக இருக்கும் போதே அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள்,நெய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதாங்க நெய் மணத்துடன் நமது மனதையும் அள்ளும் வகையில் கம்பு புட்டு ரெடி!!