நிலநடுக்கத்துக்கு முன்பே நடந்த துயரம்! ஜப்பானில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பல நாடுகளில் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வரலாற்றில் பதிவான 6-வது பெரிய நிலநடுக்கம் என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையங்கள் சுனாமி எச்சரிக்கையை விடுத்தன.
சுனாமி எச்சரிக்கை
கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டது.
ஜப்பான் துறைமுகங்கள் பாதிப்பு
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்தது. இதனால் ஜப்பானில் உள்ள துறைமுகங்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நோக்கி பெரிய அலைகள் திரண்டு வரும் காட்சிகளும் வீடியோவாக வெளியிடப்பட்டு உள்ளன.
பெரிய கட்டிடங்களுக்கு பாதிப்பு
ரஷ்யாவின் கடலோர பகுதிகளில், சுனாமி அலைகளால் பெரிய கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால், ரஷ்யாவின் கிழக்கே தொலைவில் அமைந்த வடக்கு குரில் தீவு பகுதிகளில் உள்ள சகாலின் பகுதியில் இன்று அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டது. கடலோரத்தில் இருந்த கட்டிடங்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. அதுபற்றிய வீடியோவும் வெளியானது. சுனாமி அலைகள் ஹவாய் தீவையும் தாக்கும் என கூறப்படுகிறது.
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே ஜப்பான் கடலோர பகுதியில் 4 பெரிய உருவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 8.8 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே அவை கரை ஒதுங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் தாக்குவதற்கு முன்பே அவற்றை திமிங்கலங்கள் அறிந்திருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. ஆனால், அதற்காக அவை ஏன் கரையொதுங்கின என்ற விவரம் தெரிய வரவில்லை. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒரு மர்மமாகவே உள்ளது.