மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட சிங்கப்பூர் சைபோர்க் கரப்பான் பூச்சிகளை அனுப்பியுள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் இவை தகவல்களை சேகரிக்கின்றன.

கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 3,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கும் உடல்களைத் தேடி மீட்கும் பணியில் உதவுவதற்காக, சிங்கப்பூர் சார்பில் சைபோர்க் கரப்பான் பூச்சிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஹோம் டீம் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஏஜென்சி (HTX) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கிளாஸ் இன்ஜினியரிங் அண்ட் சொல்யூஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கிய 10 கரப்பான்பூச்சி ரோபோக்கள், மார்ச் 30 அன்று சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (SCDF) ஆபரேஷன் லயன்ஹார்ட் குழுவுடன் விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டன.

மீட்பு நடவடிக்கைகளில் சைபோர்க் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது உலக அளவில் இதுவே முதல் முறை. பூச்சி-கலப்பின ரோபோக்கள் களத்தில் பயன்படுத்தப்படுவதிலும் இதுவே முதல் முறை.

#SciNews 𝗪𝗢𝗥𝗟𝗗-𝗙𝗜𝗥𝗦𝗧: 𝗦𝗜𝗡𝗚𝗔𝗣𝗢𝗥𝗘 𝗗𝗘𝗣𝗟𝗢𝗬𝗘𝗗 𝗖𝗬𝗕𝗢𝗥𝗚 𝗖𝗢𝗖𝗞𝗥𝗢𝗔𝗖𝗛𝗘𝗦 𝗧𝗢 𝗛𝗘𝗟𝗣 𝗜𝗡 𝗠𝗬𝗔𝗡𝗠𝗔𝗥

Ten cyborg cockroaches from Singapore were deployed to support rescue and retrieval efforts in earthquake-stricken Myanmar—marking the first… pic.twitter.com/bhzpX3aaJI

— ScienceKonek (@sciencekonek) April 8, 2025

சைபோர்க் கரப்பான் பூச்சிகள்:

சைபோர்க் கரப்பான் பூச்சிகள் முதலில் மார்ச் 31 அன்று இடிந்து விழுந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ஏப்ரல் 3ஆம் தேதி தலைநகர் நய்பிடாவில் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டன.

இதுவரை உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அணுக முடியாத பகுதிகளை ஆராய்வதற்கு மீட்புக் குழுவுக்கு சைபோர்க்ஸ் ரோபோக்கள் உதவி செய்கின்றன. மார்ச் 29 அன்று சிங்கப்பூர் அரசு 80 பேர் கொண்ட மீட்புக் குழுவையும் நான்கு மோப்ப நாய்களையும் மியான்மருக்கு அனுப்பியது.

சைபோர்க்ஸ் கரப்பான்பூச்சிகள் செயல்படுவது எப்படி?

ஏப்ரல் 2024 இல் சிங்கப்பூரில் நடந்த மிலிபோல் ஆசியா-பசிபிக் மற்றும் டெக்எக்ஸ் உச்சி மாநாட்டில் கரப்பான் பூச்சி ரோபோக்கள் முதலில் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை 2026ஆம் ஆண்டில் பயன்பாட்டுக் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால் மியான்மரில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, மீட்பு நடவடிக்கைக்கு உதவும் நோக்கில் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே சைபோர்க்ஸ் கரப்பான்பூச்சிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

சைபோர்க்ஸ் ரோபோக்களாக மாற்றப்பட்டிருப்பவை மடகாஸ்கர் ஹிஸிங் கரப்பான் பூச்சிகளாகும். இவை ஒவ்வொன்றும் 6 செ.மீ நீளமுள்ளது. அகச்சிவப்பு கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட்ட இவை, எலெக்ட்ரோடுகளைப் பயன்படுத்தி இவற்றின் இயக்கத்தைத் தொலைவிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிய உதவக்கூடியவை. அத்தகவல்கள் இயந்திர கற்றல் வழிமுறைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன.