- Home
- உலகம்
- புட்டபர்த்தி சாய்பாபாவுக்கும் நிக்கோலஸ் மதுரோவுக்கும் இப்படியொரு தொடர்பா.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்
புட்டபர்த்தி சாய்பாபாவுக்கும் நிக்கோலஸ் மதுரோவுக்கும் இப்படியொரு தொடர்பா.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்
ஒரு காலத்தில் பஸ் ஓட்டுநராக இருந்து வெனிசுவேலாவின் அதிபராக உயர்ந்த நிக்கோலஸ் தான் தற்போதைய ஹாட் டாபிக். மதுரோவைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

நிக்கோலஸ் மதுரோ சாய்பாபா தொடர்பு
வெனிசுவேலாவின் அரசியல் வரலாற்றில் மிகவும் வியத்தகுந்த வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டவர் நிக்கோலஸ் மதுரோ. ஒருகாலத்தில் கராகஸ் நகரில் பஸ் ஓட்டுநராக இருந்தவர், பின்னர் அதே நாட்டின் அதிபராக உயர்ந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சாதாரண தொழிலாளியின் வாழ்க்கையிலிருந்து அதிபர் மாளிகை வரை சென்ற அவரது பயணம், உண்மையில் ஒரு திரைப்படக் கதையைப் போலவே அமைந்துள்ளது.
1962 நவம்பர் 23 அன்று கராகஸில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நிக்கோலஸ் மதுரோ, கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு வாழ்க்கையை நடத்த பஸ் ஓட்டத் தொடங்கிய அவர், அதே சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைக்காக ‘டிரான்சிட் வோர்கர்ஸ் யூனியன்’ அமைப்பைத் தொடங்கினார். இதுவே அவரது அரசியல் பயணத்தின் முதல் படிக்கலாக அமைந்தது. பின்னர் கியூபாவில் பெற்ற அரசியல் பயிற்சி, அவரை புரட்சித் தலைவர் ஹுகோ சாவேஸ் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழராக மாற்றியது.
நிக்கோலஸ் மதுரோவின் ஆன்மீக நம்பிக்கை
சாவேஸின் நிழலில் வளர்ந்த நிக்கோலஸ் மதுரோ, வெளியுறவு அமைச்சர், துணை அதிபர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். 2013ஆம் ஆண்டு சாவேஸின் மறைவுக்குப் பிறகு, வெனிசுவேலாவின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினார். ஆனால் அவரது ஆட்சி காலம் சர்ச்சைகளாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியது என்றும் கூறலாம். ஒருபுறம் மக்களை குஷிப்படுத்தும் அறிவிப்புகள், மறுபுறம் எதிர்க்கட்சியினரின் போராட்டங்களை அடக்கியதாக குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்தன.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கவனிக்கத்தக்க அம்சம், இந்தியாவின் ஆன்மிக குரு சத்ய சாய் பாபா மீது ஆழ்ந்த பக்தி கொண்டது என்றே கூறலாம். நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள். 2005ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று, சாய்பாபாவின் உரைகளை தரையில் அமர்ந்து கேட்ட புகைப்படங்கள் இன்றும் பரவலாகப் பார்க்கப்படுகின்றன. அவரது அதிபர் அலுவலகத்தில் புரட்சித் தலைவர்களின் படங்களுடன் சாய்பாபாவின் பெரிய புகைப்படமும் இருந்தது என்பது குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.
சாய்பாபாவின் மறைவின் போது வெனிசுவேலாவில் தேசிய துக்கம் அறிவித்த ஒரே வெளிநாட்டு தலைவர் மதுரோ என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபாவின் “அனைவரையும் நேசிக்க வேண்டும்” என்ற போதனைகளை பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார், தற்போது கடும் அரசியல் நெருக்கடிகளுக்கும் சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும் நடுவே நிற்கிறார். பஸ் ஓட்டுநராகத் தொடங்கி ஒரு நாட்டின் “அரசன்” போல அதிகாரம் பெற்ற இந்த மனிதனின் வாழ்க்கை, ஆன்மிகம், அரசியல், சர்ச்சைகள் என பல பரிமாணங்களைக் கொண்டதாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது.

