19 ஆபத்தான நாடுகளைத் தடை செய்த டிரம்ப்! குடியேற்ற விண்ணப்பங்கள் நிறுத்திவைப்பு!
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, ட்ரம்ப் நிர்வாகம் 19 நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நாடுகள் 'அதிக ஆபத்தான நாடுகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, 19 நாடுகளின் குடிமக்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து குடியேற்ற விண்ணப்பங்களையும் (Immigration Applications) நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நாடுகள்
அமெரிக்க அரசால் 'அதிக ஆபத்துள்ள நாடுகள்' என்று வகைப்படுத்தப்பட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்ட நான்கு பக்க கொள்கை குறிப்பில், "இந்த உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள சில விண்ணப்பங்கள் முடிவெடுக்கப்படுவது தாமதமாகலாம் என்பதை USCIS கருத்தில் கொண்டுள்ளது.
எனினும், விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமான அளவிற்கு முழுமையாகச் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்தத் துறை உணர்கிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "குடியேற்ற விண்ணப்பங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்படும் தாமதம் சில விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சுமையாக இருந்தாலும், தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் மற்றும் பேணிக் காக்கும் நிறுவனத்தின் கடமையுடன் ஒப்பிடும்போது இந்தச் சுமை அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று USCIS தீர்மானித்துள்ளது," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கைக்கான காரணம்
இந்த அதிரடி நடவடிக்கை கடந்த வாரம் வாஷிங்டன், டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலர் கிறிஸ்டி நோயம் ஆகியோர் குடியேற்ற அமலாக்கத்தை மேலும் கடுமையாக்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதன் காரணமாக, இந்த 19 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்களை முழுமையாக மறு ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் நேர்காணலை மீண்டும் நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

