கிரீன் கார்டு, விசா இருந்தாலும் பத்தாது.. வெளிநாட்டினருக்கு குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்!
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வெளிநாட்டவர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் 26 முதல் அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறைகள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், குடியேற்றம் மற்றும் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வந்து, செல்வது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்
வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்ட உயிர் அளவீட்டு (Biometric) விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறை முன்பு அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய விதியின் கீழ், இந்த விலக்கு நீக்கப்பட்டு, இந்த உயிர் அளவீட்டுத் தரவு சேகரிப்பு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26 முதல் அமல்
இந்த புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தரவு சரிபார்ப்பு முறை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஒவ்வொரு பயணியுடனும் இணைக்கப்பட்ட புகைப்பட தரவுத்தளங்களைத் தொகுத்து, கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்டுகள்), பயண ஆவணங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கும். இந்த படங்கள் பின்னர் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேரப் புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு சரி பார்க்கப்படும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறை
ஜனவரி 2025 இல் பதவிக்கு வந்ததிலிருந்து, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் குடியேற்ற அமைப்பில் பல மாற்றங்களைச் செய்து வருகிறார். "சட்டவிரோத குற்றவாளிகளை" அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சியாக, நாட்டின் பல பகுதிகளில் ICE சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், சமூக ஊடகப் பின்னணி ஆய்வு (social media vetting) என்பது முக்கியமான விதிகளில் ஒன்றாகும்.