சாகக் காத்திருக்கிறோம்... காசாவில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடும் தாய்!
காசா நகரில் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியில், நூர் அபு ஹஸ்ஸிரா தனது மூன்று மகள்களுடன் சிக்கித் தவிக்கிறார். போரில் கணவரை இழந்தும், குழந்தைகளுடன் அவதிப்படும் இவர், ஒரு கூடாரத்தில் மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறார்.

காசாவில் குழந்தைகளுடன் தவிக்கும் பெண்
காசா நகரில் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பி, நூர் அபு ஹஸ்ஸிரா தனது மூன்று மகள்களுடன் தஞ்சமடைந்துள்ளார். வான்வழித் தாக்குதல்களும் டிரோன்களின் சத்தமும் இஸ்ரேலியப் படைகள் நெருங்கி வருவதை உணர்த்துகின்றன. போரின் தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்ததால் அபு ஹஸ்ஸிராவால் வெளியேற முடியவில்லை.
இடம்பெயர்ந்தோர் முகாமிற்குச் செல்லத் தேவையான 2,000 டாலர் பணம்கூட அவரிடம் இல்லை. காசா நகர மக்கள் அனைவரும் தெற்கு நோக்கிச் சென்றாலும், இவர் அங்கேயே தங்கியுள்ளார்.
போரில் மாயமான கணவர்
போர் தொடங்கியதிலிருந்து 11 முறை இடம்பெயர்ந்த அபு ஹஸ்ஸிரா, இப்போது இறப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகச் சொல்கிறார். அவரது கணவர் இஸ்ரேலியச் சிறையில் உள்ளார். போரில் வீட்டை இழந்த நிலையில், இப்போது ஒரு கூடாரத்தில் வசிக்கிறார். "கூடாரத்தில் வாழப் பயமாக இருக்கிறது. குளிரில் வாட்டுகிறது. பூச்சிகள் தொல்லை. தண்ணீர் எப்படிக் கிடைக்கும் என்று தெரியவில்லை" என்கிறார்.
கடந்த டிசம்பரில், அபு ஹஸ்ஸிராவின் அடுக்குமாடி குடியிருப்பு தாக்கப்பட்டது. அதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரது மகள்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி, உயிர் பிழைத்தனர். கணவர் ராத் மார்ச் மாதம் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் கடத்திச் செல்லப்பட்டார். அன்று முதல், ராத் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மகளுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது, அவள் இன்னும் "அப்பா" என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை என்று அபு ஹஸ்ஸிரா வருத்தப்படுகிறார்.
உணவுப் பொருட்கள் விலையேற்றம்
போரின் காரணமாக, வட காசாவில் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஒரு கிலோ சர்க்கரை 180 டாலர், மாவு 60 டாலர் என உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அபு ஹஸ்ஸிராவின் மூத்த மகள் ஜூரி ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் உதவியால் ஜூரி குணமடைந்து வருகிறார்.
ஒன்றாகச் சாக வேண்டும்
காசா நகரில் பட்டினி சாவுகள் அதிகரித்து வருகின்றன. இடையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அது விரைவில் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் காசாவை விட்டு வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அபு ஹஸ்ஸிரா தானும் குழந்மைகளும் தெற்கு நோக்கிச் செல்ல 900 டாலர் தேவைப்படும் என்றும், கூடாரம் அமைக்க 1,100 தேவைப்படும் என்றும் கூறுகிறார்.
"என் மகள்களும் நானும் ஒன்றாக இறந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன், நாங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறோம்" என்று அபு ஹஸ்ஸிரா கூறுகிறார்.