இங்கிலாந்து இளவரசர் ஹாரி, உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 'இன்விக்டஸ் கேம்ஸ் ஃபவுண்டேஷன்' குழுவுடன் அவர் கீவ் நகருக்கு வந்து, உக்ரைன் பிரதமர் மற்றும் வீரர்களை சந்தித்தார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ரஷ்யாவுடனான போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
உக்ரைன் ரயில்வே சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, இளவரசர் ஹாரி வெள்ளிக்கிழமை அதிகாலை ரயிலில் கீவ் நகருக்கு வந்தடைந்தார். ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட அழிவை நேரில் காணவும், உக்ரைன் வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்கவும் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக உக்ரைன் ரயில்வே தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
ஹாரியின் இந்தப் பயணத்துக்கு முன்பு, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ்வேட் கூப்பர் உக்ரைனின் கீவ் நகருக்குச் சென்றார். அந்தப் பயணம் கூப்பர் பிரிட்டன் அமைச்சரானதும் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் அமைந்தது.
இளவரசரின் அறக்கட்டளை
காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவும் அவரது 'இன்விக்டஸ் கேம்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை குழுவுடன் இளவரசர் ஹாரி உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். "நம்மால் போரை நிறுத்த முடியாது, ஆனால், போரில் பாதிக்கப்பட்டவர்களின் மீட்சிக்கு உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யலாம்," என்று பிரிட்டனின் 'தி கார்டியன்' செய்தித்தாளிடம் ஹாரி தெரிவித்தார்.
அவர் உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விர்டென்கோ மற்றும் சுமார் 200 உக்ரைன் வீரர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
41வது பிறந்தநாள் கொண்டாட்டம்
வரும் திங்கட்கிழமை தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹாரி, இந்த வார தொடக்கத்தில் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையான மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்தார்.
2020-ஆம் ஆண்டில் தனது அரச பதவிகளைத் துறந்து மனைவி மேகனுடன் கலிபோர்னியாவுக்குச் சென்றதில் இருந்து, ஹாரி மற்ற அரச குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
