உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம்; 12 நாட்கள் 100 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்; எங்கு தெரியுமா?
உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம் நடந்துள்ளது. சுமார் 12 நாட்கள் வாகனங்கள் நெரிசலில் மாட்டிக் கொண்டன. இது எங்கு நடந்தது? என்ன நடந்தது? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Traffic Jam
போக்குவரத்து நெரிசல்
இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு போட்டியாக வாகனங்களும் பெருகி வருகின்றன. இன்று பைக், ஸ்கூட்டர்கள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இதேபோல் பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கார்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். கொரொனாவுக்கு பிறகே வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது.
அதுவும் தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உள்ளது. பெங்களூரு, சென்னையில் என்னதான் பாலங்கள் கட்டினாலும், மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை.
மாலை 6 மணிக்கு வேலை முடிந்தாலும் டிராபிக் ஜாமில் மணிக்கணக்கில் சிக்கித் தவித்து இரவு 10 மணிக்கு வீட்டுக்கு செல்லும் சென்னை மற்றும் பெங்களூரு வாகன ஓட்டிகளின் வேதனையை வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது.
Chennai, Banglore Traffic Jam
உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம்
பொதுவாக நாம் வெறும் 5 நிமிடங்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டாலே, ''என்னப்பா இது.. எப்ப வீடு போய் சேர்றது'' என்று புலம்புகிறோம். ஆனால் ஒரு நாட்டில் தொடர்ந்து 12 நாட்கள் மக்கள் டிராபிக் ஜாமில் சிக்கித்தவித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் இப்படி ஒரு மோசமான டிராபிக் ஜாம் உண்மையிலேயே நடந்துள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் தான் இந்த மோசமான டிராபிக் ஜாம் அரங்கேறியுள்ளது.
அதாவது கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து திபெத் செல்லும் விரைவுச்சாலையில் (சீன தேசிய நெடுஞ்சாலை 110) மிக நீண்ட டிராபிக் ஜாம் நிகழந்தது. அந்த நாளில் அந்த சாலையில் பணிகள் நடந்ததால், போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது.
அப்போது மங்கோலியாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றியபடி அந்த சாலையில் சென்ற ஏராளமான கன்டெய்னர் லாரிகள் குறுகலான இடங்களில் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டன.
டிரம்ப் vs சீனா வர்த்தகப் போர் ஆரம்பம்; இந்திய உற்பத்திக்கு பெரும் அடி; எப்படி தெரியுமா?
World Longest Traffic Jam
மொத்தம் 12 நாட்கள்
இதன் காரணமாக அந்த சாலையில் மேற்கொண்டு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. அதாவது மேற்கொண்டு செல்ல முடியாததால் கார்கள் உள்பட பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுமார் 100 கிமீ தூரம் வரை அணிவகுத்து நின்றன. போக்குவரத்து அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் கன்டெய்னர் லாரிகளை அங்கு இருந்து அகற்ற முடியவில்லை. ஒரு நாள்; இரண்டு நாள் மற்றும் மூன்று நாள் இல்லை. மொத்தம் 12 நாட்கள் கடும் டிராபிக் ஜாமில் வாகனங்கள் சிக்கித் தவித்தன.
இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களிலேயே சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கினர். வாகன ஓட்டிகள், டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்காக அந்த சாலையில் தற்காலிக தங்கும் வீடுகள் கட்டப்பட்டன. மேலும் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், நூடுல்ஸ் மற்றும் பிற உணவுப் பொருட்கள் நான்கு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 மடங்கு அதிக விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
China Traffic Jam
வாழ்க்கையை வெறுத்த வாகன ஓட்டிகள்
சுமார் 12 நாட்கள் ஒரே இடத்தில் இருந்ததால் டிராபிக் ஜாமில் சிக்கியவர்கள் வாழ்க்கையே வெறுத்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் கோபத்தில் வாகனங்களை மற்ற வாகனங்கள் மீது மோதச்செய்து விபத்துகளையும் ஏற்படுத்தினார்கள். உலகம் முழுவதும் இந்த டிராபிக் ஜாம் வைரலான நிலையில், சீன அதிகாரிகள் இரவும், பகலுமாக நெரிசலுக்கு தீர்வு காண போராடினார்கள்.
ஒருவழியாக அந்த கன்டெய்னர் லாரிகள் அகற்றப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 26ம் தேதி இந்த நீண்ட நெடிய டிராபிக் ஜாம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தான் வாகன ஓட்டிகளுக்கும், சீன அதிகாரிகளுக்கும் உயிரே வந்தது. உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம் இதுதான். இந்த டிராபிக் ஜாமில் சிக்கியவர்கள் கண்டிப்பாக அடுத்த சில நாட்களில் வாகனங்களை கண்டாலே தெறித்து ஓடி இருப்பார்கள்.
அட கொடுமையே! 30 லட்சம் தெரு நாய்களை கொல்லும் மொராக்கோ; ஏன் தெரியுமா?