டிரம்ப் vs சீனா வர்த்தகப் போர் ஆரம்பம்; இந்திய உற்பத்திக்கு பெரும் அடி; எப்படி தெரியுமா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் 20ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், டிரம்ப்-சீனா மோதல் இப்போதே ஆரம்பமாகி உள்ளது. இந்த மோதல் இந்திய உற்பத்தி துறையில் கடும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. அது எப்படி? என்ன பாதிப்பு? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
டிரம்ப் vs சீனா மோதல் ஆரம்பம்
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற நிலைப்பாட்டை முன்வைத்து மீண்டும் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் கல்வி, பொருளாதரம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வரப் போகிறார்.
சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் சீனா மீது கடும் வர்த்தகப் போரை மேற்கொண்டிருந்த டிரம்ப், இந்த முறையும் அதை தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்கா அதன் ஒட்டுமொத்த இறக்குமதியில் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை டிரம்ப் குறைக்க முடிவெடுத்துள்ளார்.
உஷாரான சீனா
அமெரிக்கா தாங்களுக்கு எதிரான வர்த்தக நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்த்துள்ள சீனா, முன்கூட்டியே உஷாராகி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது சூரிய மின்கலங்கள், அதன் பாகங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்சார சாதனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள், அத்தியாவசிய தாதுக்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில் சீனா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவிற்கு நேரடி ஏற்றுமதிக்கு தடை விதிக்கின்றன. அது மட்டுமின்றி அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இந்த ஏற்றுமதி தடை பொருந்தும்.
இந்திய உற்பத்திக்கு பலத்த அடி
சீனாவின் இந்த ஏற்றுமதி தடையால் இந்திய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 'அமெரிக்கா சீனா வர்த்தக போரால் இந்தியாவுக்கு தானே லாபம்; இனிமேல் அமெரிக்கா ஏற்றுமதி பொருட்களுக்கு இந்தியாவை தானே சார்ந்திருக்கும்' என்று நீங்கள் கேட்கலாம். அமெரிக்கா சீனா வர்த்தக போரால் இந்தியாவுக்கு ஒருபக்கம் லாபம் இருந்தாலும் மறுபக்கம் உற்பத்தியில் பெரும் பின்னடைவை இந்தியா சந்திக்க இருக்கிறது.
ஏனென்றால் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் செல்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகனங்கள் உற்பத்தி என இந்தியா சொந்தமாக பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு இந்தியா நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ சீனாவை தான் சார்ந்து இருக்கிறது. சீனாவில் இருநது தான் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள், பேட்டரி தயாரிக்கும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
மின்சாதன மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை
ஆகையால் இப்போது சீனா எடுத்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்திய உற்பத்தி பெரும் பின்னடைவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. சீனா கடந்த டிசம்பர் மாதம் சூரிய மின்கல உற்பத்திக்கு இன்றியமையாத காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் ஏற்றுமதியை தடை செய்தது.
அதன் பிறகு அத்தியாவசிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான ஆண்டிமனியையும் தடை செய்தது. இந்த மாத தொடக்கத்தில் மின்சார மின்கல பேட்டரி உற்பத்திக்கு முக்கியமான லித்தியம் மற்றும் பேட்டரி கேத்தோடு தொழில்நுட்ப மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கும் சீனா தடை விதித்து இருக்கிறது.
சீனாவை நம்பியிருக்கும் இந்திய நிறுவனங்கள்
''சீனாவின் ஏற்றுமதி தடையால் இந்தியாவில் மின்னணுவியல், சூரிய சக்தி மற்றும் மின்சார மின்சாரத் துறைகளில் உள்ள இந்திய நிறுவனங்கள் பெரும் உற்பத்தி தடைகளையும், இடையூறுகளையும் எதிர்கொண்டுள்ளன. ஏனெனில் இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் சீன இயந்திரங்கள், சீன மூலப்பொருட்களை மட்டுமே நம்பியுள்ளன'' என்று பொருளாதார சிந்தனைக் குழுவான GTRI நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கடந்த 2022-23ம் ஆண்டுகளில் 98.5 பில்லியன் டாலர்களில் இருந்து 2023-24ம் ஆண்டுகளில் 101.73 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. சீனாவின் இந்த ஏற்றுமதி தடை அமெரிக்காவை இலக்காக கொண்டிருந்தாலும், இந்தியாவையும் ஒருவகையில் சீனா பழிவாங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பழிவாங்கியதா சீனா?
ஏனென்றால் கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளின் உறவும் அவ்வளவு இனிமையாக இல்லை. சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
அத்துடன் சீன முதலீடுகளுக்கும், சீனாவின் விசாக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த சீனா, அந்த அதிருப்தியை இப்போது ஏற்றுமதி தடை மூலம் காட்டியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.