- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Sun TV : படம் முதல் சீரியல் வரை... இனி எல்லாமே ஷார்ட்ஸ் தான்! ஜென் ஸி-யை கவர சன் டிவி-யின் புதிய அதிரடி
Sun TV : படம் முதல் சீரியல் வரை... இனி எல்லாமே ஷார்ட்ஸ் தான்! ஜென் ஸி-யை கவர சன் டிவி-யின் புதிய அதிரடி
Sun TV Launches Sun NXT Shorts : சன் நெக்ஸ்ட் செயலியிலேயே இது ஒரு புதிய அம்சமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை சின்ன சின்ன எபிசோட்களாகப் பார்க்க முடியும்.

Sun TV Launches Sun NXT Shorts
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' என்ற புதிய மைக்ரோ-டிராமா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, ஏற்கனவே உள்ள சன் நெக்ஸ்ட் செயலிக்குள்ளேயே ஒரு புதிய அம்சமாகச் செயல்படும். இதன் மூலம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பார்வையாளர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப, சின்ன சின்ன சுவாரஸ்யமான கதைகளை வழங்க முடியும் என சன் டிவி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
சீரியல்களை ஷார்ட்ஸ் ஆக பார்க்கலாம்
உலகளவில் டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் மைக்ரோ-என்டர்டெயின்மென்ட் துறையில், சன் நெக்ஸ்ட் இதன் மூலம் நுழைகிறது. குறுகிய நேரத்தில் பார்க்கக்கூடிய, விறுவிறுப்பான கதைகளை மையமாக வைத்து 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. சன் டிவி நெட்வொர்க்கின் பிராந்திய கதை சொல்லும் அனுபவத்தையும், இந்த புதிய ஷார்ட்ஸ் வடிவத்தையும் இது இணைக்கிறது. தென்னிந்திய மக்களின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் கதைகளை வழங்குவதில் இந்த தளம் உறுதியாக உள்ளது.
இதில் என்ன ஸ்பெஷல்?
இந்த தளத்தில் பிரத்யேக ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச மொழிகளிலிருந்து டப் செய்யப்பட்ட ஷார்ட்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் சன் டிவி-யின் பிரபலமான சீரியல்கள் எனப் பலவும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், வேகமான எபிசோட்களாக ரீ-எடிட் செய்யப்பட்டு, புதிய வடிவில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களையும், டிவி நிகழ்ச்சிகளையும் முற்றிலும் புதிய, வேகமான டிஜிட்டல் வடிவத்தில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', சூர்யாவின் 'அயன்', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' போன்ற பிளாக்பஸ்டர் தமிழ் படங்களும், 'எதிர்நீச்சல்', 'கயல்', 'சிங்கப்பெண்ணே' போன்ற டிவி சீரியல்களும் இதில் அடங்கும்.
காவ்யா மாறன் விளக்கம்
இந்த புதிய முயற்சி குறித்து சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் காவ்யா மாறன் கூறுகையில், "தென்னிந்திய மீடியா சந்தை ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. மக்கள் இப்போது அதிக கன்டென்ட் பார்ப்பது மட்டுமல்ல, அதை வித்தியாசமான முறைகளில், பல ஸ்கிரீன்களில், குறுகிய நேரத்தில் பார்க்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. இந்த மாற்றத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவுதான் 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்'. எங்களிடம் 65,000 மணி நேர கன்டென்ட், பல தசாப்த கால கதை சொல்லும் அனுபவம், மற்றும் வேறு யாராலும் ஒரே இரவில் உருவாக்க முடியாத ஒரு விநியோக நெட்வொர்க் உள்ளது. இந்த சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதே எங்கள் நோக்கம். வேறு யாராவது இந்தத் துறையை வரையறுப்பதற்கு முன், நாங்களே அதைச் செய்ய விரும்புகிறோம். அதுதான் நாங்கள் உருவாக்கும் பிசினஸ்," என்றார்.
சன் நெக்ஸ்ட் செயலியை ஏற்கனவே பயன்படுத்தும் குடும்பப் பார்வையாளர்களை, இந்த வேகமான கதை சொல்லும் முறை மூலம் மீண்டும் ஈர்க்க 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உதவுகிறது. அதே சமயம், இந்த ஷார்ட்ஸ் வடிவம் இளம் டிஜிட்டல் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாக இருப்பதால், அவர்களைக் கவரும் வகையில் புதிய கன்டென்ட்டும் உருவாக்கப்படும். இதன் மூலம், இந்தச் சேவை பல தலைமுறை பார்வையாளர்களையும் எளிதாக இணைக்கிறது.

