- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Janani Ashokkumar Breaks Silence : கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் நடிகை ஜனனி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஜனனி அசோக்குமார்
சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாகத் தனது பெயரைத் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டு வரும் ரூ.634 கோடி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஜனனி அசோக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், உண்மையை உறுதிப்படுத்தாமல் ஒருவரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ள ஜனனி, ஊடகங்களுக்கும் சமூக வலைதளப் பயனர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
ரூ.634 கோடி மோசடி குற்றச்சாட்டு.. ஜனனி அளித்த விளக்கம்!
கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரூ.634 கோடி மோசடி தொடர்பான பதிவுகளுடன் தனது பெயரும் இணைத்துப் பேசப்படுவதாக ஜனனி குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதுமே அரசியலில் இருந்து விலகியே இருந்திருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததில்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பையும் வைத்துக்கொண்டதில்லை. என்னைப் பற்றி தற்போது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. அவை நான் வாழ்ந்த வாழ்க்கையையோ, என்னுடைய உண்மையான அடையாளத்தையோ பிரதிபலிக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் இல்லாமல் எப்படி குற்றச்சாட்டுகளைப் பரப்பலாம்?
தனது பெயரைச் சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புபடுத்தி செய்திகளும் பதிவுகளும் வெளியிடப்படுவது குறித்து ஜனனி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒருவர் மீது இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமலும், உறுதியான ஆதாரங்களை முன்வைக்காமலும் குற்றச்சாட்டுகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களுக்குச் சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதாகவும், ஒருவரின் பெயர் அல்லது புகைப்படத்துடன் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை இணைத்துப் பரப்புவது அவரது நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை எழுவது மட்டுமே, அதில் குறிப்பிடப்படும் நபர் தவறு செய்துவிட்டார் என்பதற்கான ஆதாரமாகிவிடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொந்த உழைப்பில் உருவாக்கிய வாழ்க்கை.. ஜனனி வேதனை!
தனது வாழ்க்கை மற்றும் திரைத்துறைப் பயணம் குறித்தும் ஜனனி அறிக்கையில் உருக்கமாகப் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் கடுமையாக உழைத்து, தனக்கென ஒரு வாழ்க்கையையும் நற்பெயரையும் உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யாருடைய ஆதரவையும் சார்ந்திருக்காமல், ஆரம்பத்திலிருந்து சொந்த முயற்சியால் தனது வாழ்க்கையையும் தொழிலையும் கட்டமைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இணையத்தில் தொடர்ந்து பரப்பப்படும் ஒரு தவறான தகவல் இத்தனை ஆண்டுகால உழைப்பையும் மறைத்துவிடுமா என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு தகவல் அதிகமாகப் பகிரப்படுகிறது என்பதற்காகவே, அதன் உண்மைத்தன்மையை அறியாமல் பலரும் அதை நம்பிவிடுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தன்னை நன்கு அறிந்தவர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பது தெரியும் என்றும், இருப்பினும் மீண்டும் மீண்டும் தனது தரப்பு நியாயத்தை விளக்க வேண்டிய சூழல் மனதளவில் சோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது எளிதாகக் குற்றம் சுமத்துவதா?
தனது அறிக்கையில் பெண்களின் கண்ணியம் குறித்தும் ஜனனி முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். உண்மை என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பே, ஒரு பெண் மீது எளிதாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் அவருக்குத் தவறான அடையாளத்தை ஏற்படுத்துவதும் மிகவும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் தனது சுயமரியாதையுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை உணராமல், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனனி வைத்த வேண்டுகோள்!
தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறு ஊடகங்களுக்கும் இணையப் பயனர்களுக்கும் ஜனனி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் பதிவுகளைத் திருத்தவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தக் கடினமான சூழலில் நிதானமாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டு தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார். தனது அறிக்கையின் இறுதியில், உண்மையும் ஆதாரங்களும் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஒரு மனிதரின் கண்ணியமும் முக்கியமானது என்ற கருத்தை ஜனனி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ரூ.634 கோடி மோசடி தொடர்பாகத் தனது பெயரை இணைத்துப் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை ஜனனி அசோக்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், அவரது இந்த விளக்க அறிக்கை கவனம் பெற்றுள்ளது





