- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Bigg Boss Tamil Survival Battle : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் ரெட் டீம் வென்றதா? ப்ளூ டீம் வென்றதா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Blue Team vs Red Team
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பைக் கூட்டி வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்கள், எதிர்பாராத திருப்பங்கள், வித்தியாசமான டாஸ்க்குகள் என இந்த சீசன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது 44 நாட்களைக் கடந்து 45-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏழாவது வாரத்தில் நடைபெற்று வரும் சர்வைவல் பேட்டில் டாஸ்க் பிக்பாஸ் வீட்டையே போர்க்களமாக மாற்றியுள்ளது.
சர்வைவல் பேட்டில் டாஸ்க்கால் வெடித்த பிரச்சனை!
இந்த வாரம் போட்டியாளர்கள் சிவப்பு மற்றும் நீலம் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு சர்வைவல் பேட்டில் டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றிபெறும் அணிக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தோல்வியைச் சந்திக்கும் அணியினர் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணியினரும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதேசமயம், அணிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மை தற்போது தனிப்பட்ட மோதலாகவும் மாறத் தொடங்கியுள்ளது.
ஜேசன் - அவினாஷ் இடையே வெடித்த கடும் வாக்குவாதம்!
ரெட் டீமின் கேப்டன்ஷிப் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என ஜேசன் தெரிவித்தது புதிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. இதைக் கேட்ட டிடிஎஃப் வாசன், இந்த விஷயத்தை முன்பே தெரிவித்திருக்கலாமே என ஜேசனிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்குப் பதிலளித்த ஜேசன், ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது என்றும், தற்போது நிலைமை சரியில்லை என்றும் விளக்கம் அளிக்கிறார்.
ஜேசனின் இந்தப் பேச்சால் ஆத்திரமடைந்த அவினாஷ், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், வெளியே வந்து பார்த்துக்கொள்ளலாம் என ஜேசன் சவால் விடுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த அவினாஷ், 'என்ன வெளியே வா, வெளியே வானு சொல்ற? இப்பவே வெளியே வர்றேன்.. என்ன பண்ணுவ?' என ஆவேசமாகக் கேட்கிறார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைய, ரெட் டீம் போட்டியாளர்கள் அவினாஷைத் தடுத்து நிறுத்துவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன. ஜேசன் அணி மாறிய விவகாரம் ரெட் டீமுக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
டை பிரேக்கரில் வென்ற ப்ளூ டீம்.. ரெட் டீமுக்கு அதிர்ச்சி!
இதற்கிடையில், 45-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவையும் நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் சர்வைவல் பேட்டில் டாஸ்க்கில் இரு அணிகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக்கர் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் நீல நிற அணி வெற்றியைத் தட்டிச் செல்கிறது. வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிவப்பு நிற அணியினர் கிச்சனைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கின்றனர்.
இதனால் ரெட் டீம் போட்டியாளர்கள் உணவு தயாரிப்பதற்குக்கூட சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ப்ளூ டீமின் இந்த முடிவு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்தடுத்து வெடிக்கும் பிரச்சனைகள்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு!
ஒருபுறம் ஜேசன் - அவினாஷ் இடையேயான மோதல், மறுபுறம் கிச்சனை இழந்த ரெட் டீமின் நிலை என இன்றைய எபிசோடில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பது ப்ரோமோ மூலம் தெரிகிறது. கிச்சன் தடையை ரெட் டீம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? ஜேசனுக்கும் அவினாஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருமா? அல்லது இந்த சர்வைவல் பேட்டில் டாஸ்க் இன்னும் பெரிய பிரச்சனையை உருவாக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ இணையத்தில் பிக்பாஸ் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

