மீண்டும் எதிர்நீச்சலில் ‘அய்யனார் துணை’ நிலா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
சன் டிவி சீரியல் மூலம் பேமஸ் ஆன நடிகை மதுமிதா, தற்போது அய்யனார் துணை சீரியலில் நிலாவாக நடித்து வரும் நிலையில், அவர் தற்போது எதிர்நீச்சல் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளாராம்.

Ayyanar Thunai Heroine Back to Sun TV Ethirneechal Serial
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மதுமிதா. இவர் கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்கிற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் மதுமிதா. அந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சன் டிவியில் ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அதுதான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சன் டிவியில் சக்கைப்போடு போட்டது. இதில் மதுமிதாவின் நடிப்பும் ஹைலைட்டாக பேசப்பட்டது.
2 ஆண்டுகளில் முடிக்கப்பட்ட எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மறைவுக்கு பின்னர் பின்னடைவை சந்தித்ததால் கடந்த 2024-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கதையை சற்று புதுப்பித்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கினர். ஆனால் அதில் ஹீரோயினாக நடித்த மதுமிதா விலகியதால் அவருக்கு பதில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி கமிட் ஆனார். அவரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருவதோடு, டிஆர்பி ரேஸிலும் முன்னிலை வகிக்கிறது.
விஜய் டிவிக்கு தாவிய மதுமிதா
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய மதுமிதா சட்டென விஜய் டிவிக்கு தாவினார். அதில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை என்கிற சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆனார். அந்த சீரியலும் ஆரம்பித்த வேகத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியது. அதில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. அய்யனார் துணை சீரியல் தான் விஜய் டிவி தொடர்களிலேயே அதிகளவில் டிஆர்பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. எதிர்நீச்சல் ஜனனியாக அவர் நடித்தபோது கிடைத்த வரவேற்புக்கு இணையாக தற்போது அவரின் நிலா கேரக்டருக்கும் கிடைத்து வருகிறது.
மீண்டும் எதிர்நீச்சலில் மதுமிதா
இந்த நிலையில், நடிகை மதுமிதா மீண்டும் சன் டிவிக்கு வர இருக்கிறார். அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் கம்பேக் கொடுக்க இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுதான் நிஜமும் கூட. சன் டிவியில் காலை நேரத்தில் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நந்தினி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதால், வருகிற பிப்ரவரி 16-ந் தேதி முதல் எதிர்நீச்சல் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் எதிர்நீச்சலில் ஜனனியாக மதுமிதாவின் நடிப்பை ரசிகர்கள் மீண்டும் கண்டுகளிக்க உள்ளனர்.
வரவேற்பு கிடைக்குமா?
தற்போது சன் டிவியில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் மறு ஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு போடப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால், அண்மையில் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது மறு ஒளிபரப்பை நிறுத்தினார்கள். அதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது எதிர்நீச்சல் தொடரை மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இதற்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

