- Home
- டெக்னாலஜி
- இனி ஆபாச, வன்முறை வீடியோக்கள் வராது... இந்தியாவில் அல்காரிதத்தை மாற்றியமைத்த இன்ஸ்டாகிராம்!
இனி ஆபாச, வன்முறை வீடியோக்கள் வராது... இந்தியாவில் அல்காரிதத்தை மாற்றியமைத்த இன்ஸ்டாகிராம்!
இந்தியாவில் ஆபாச, வன்முறை வீடியோக்களைக் கட்டுப்படுத்த இன்ஸ்டாகிராம் பரிந்துரை அல்காரிதத்தில் புதிய மாற்றம். ரீல்ஸ், ஃபீட் பரிந்துரைகளை நீங்களே கட்டுப்படுத்துவது எப்படி? முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்
சமூக வலைதளங்களின் உள்ளடக்கக் கண்காணிப்பு நடைமுறைகள் மீது மத்திய அரசின் கவனம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பயனர்களுக்குப் பாலியல் ரீதியாகக் கிளர்ச்சியூட்டும் (Sexually suggestive) மற்றும் வன்முறைச் சித்தரிப்பு கொண்ட உள்ளடக்கங்கள் பரிந்துரைக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தனது தானியங்கி பரிந்துரை அமைப்புகளில் (Recommendation systems) மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மாற்றங்களைச் செய்துள்ளது.
முன்கூட்டியே கண்டறியும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பின்தொடராத கணக்குகளின் பதிவுகள் எக்ஸ்ப்ளோர் (Explore), ரீல்ஸ் (Reels) மற்றும் ஃபீட் (Feed) பக்கங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. இதுகுறித்து நவ.16-ம் தேதி வெளியிட்ட வலைப்பதிவில், இந்தியப் பயனர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் மற்றும் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களைக் குறைவாகக் காட்டும் வகையில் தனது அமைப்புகளை மாற்றியமைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பரிந்துரை வழிகாட்டுதல்களுக்குப் புறம்பான உள்ளடக்கங்களை முன்கூட்டியே குறைக்க முடிந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பயனர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், உள்ளடக்கங்களை நேரடியாகப் பகுப்பாய்வு செய்யும் மேம்பட்ட ஏ.ஐ (AI) மாதிரிகளை உலகளவில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் பின்னணி
தவறான தகவல்கள், திரிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் பதிவுகளைப் பரிந்துரை அமைப்புகள் அதிகப்படுத்தாமல் இருக்க, இன்ஸ்டாகிராமின் ரேங்கிங் மற்றும் பரிந்துரை முறைகளை மறுஆய்வு செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (IT Ministry) கடந்த அக்.10-ம் தேதி மெட்டா நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலும், சிறார் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் (CSAM) மற்றும் மோசடிப் பதிவுகள் குறித்து இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
பயனர்கள் தங்கள் ஃபீடைக் கட்டுப்படுத்துவது எப்படி?
சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி (IT Rules, 2021) விதிகளை மீறும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீக்கி வருகிறது. இதுதவிர, பயனர்கள் தங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கங்களைத் தாங்களே கட்டுப்படுத்தவும் பல வசதிகள் உள்ளன.
Sensitive Content Control & Political Content Control - செட்டிங்ஸ் (Settings) பகுதியில் உள்ள 'Content Preferences' மூலம் உணர்திறன் மிக்க மற்றும் அரசியல் சார்ந்த பரிந்துரைகளைக் குறைக்கலாம்.
Not Interested - தேவையற்ற பதிவு அல்லது ரீல்ஸில் உள்ள 3 புள்ளிகளை அழுத்தி 'Not interested' என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கலாம்.
Hidden Words & Reset - கமெண்ட் மற்றும் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது எமோஜிக்களைத் தடுக்கவும், 'Content Preferences' மூலம் பழைய பரிந்துரைகளை முழுமையாக ரீசெட் (Reset) செய்யவும் முடியும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.













