- Home
- டெக்னாலஜி
- உங்கள் பைக்கிற்கு ஃபைன் வந்திருக்கா? உடனே பணம் கட்டாதீங்க.. இதை படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!
உங்கள் பைக்கிற்கு ஃபைன் வந்திருக்கா? உடனே பணம் கட்டாதீங்க.. இதை படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!
Parivahan போக்குவரத்து அபராதம் என்ற பெயரில் பரவும் புதிய மோசடி! பரிவாஹன் இணையதளம் போலவே போலி லிங்க் அனுப்பிப் பணம் திருட்டு. தப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே.

Fine புதிய வகை மோசடி
இந்தியாவில் தற்போது வாகன ஓட்டிகளைக் குறிவைத்து ஒரு புதிய வகை சைபர் மோசடி (Cyber Fraud) பரவி வருகிறது. "உங்களுக்குப் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே கட்டுங்கள்" என்று உங்கள் மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வந்தால், அவசரப்பட்டு அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யாதீர்கள். அது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்வதற்கான ஒரு பொறியாக இருக்கலாம்!
'பரிவாஹன்' பெயரில் ஏமாற்று வேலை
மோசடி கும்பல்கள் அரசு இணையதளமான 'பரிவாஹன்' (Parivahan) போன்றே தோற்றமளிக்கும் போலியான இணையதளங்களை உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு வரும் மெசேஜில் உள்ள லிங்க், பார்க்கும்போது உண்மையானது போலவே இருக்கும் (உதாரணமாக: 'Prairvahsan' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்). ஆனால், உற்றுப் பார்த்தால் மட்டுமே அந்த எழுத்துப் பிழைகள் தெரியும். அவசரத்தில் நாம் அதைக் கவனிக்காமல் கிளிக் செய்துவிடுவோம் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எப்படி நடக்கிறது திருட்டு?
நீங்கள் அந்தப் போலி லிங்கை கிளிக் செய்தவுடன், அது உங்களை ஒரு இணையப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு அபராதம் செலுத்துவது போல நடித்து, உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி லாகின் ஐடி (Login ID), பாஸ்வேர்ட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடிவிடுவார்கள். சில சமயங்களில், அந்த லிங்கைத் தொட்டாலே உங்கள் போனில் மால்வேர் (Malware) எனப்படும் வைரஸ் ஏறிவிடும் ஆபத்தும் உள்ளது.
உஷாராக இருப்பது எப்படி?
1. லிங்கை கிளிக் செய்யாதீர்: அறிமுகமில்லாத எண்ணிலிருந்து, குறிப்பாக +91 எண்ணிலிருந்து வரும் இதுபோன்ற மிரட்டல் தொணியிலான மெசேஜ்களில் உள்ள லிங்குகளைத் தொடாதீர்கள்.
2. அதிகாரப்பூர்வ தளத்தை நாடுங்கள்: உங்களுக்கு உண்மையிலேயே அபராதம் இருக்கிறதா என்று சந்தேகம் இருந்தால், அந்த லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாகக் கூகுளில் "Parivahan" அல்லது உங்கள் மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் வண்டி எண்ணைப் போட்டுச் சோதித்துப் பாருங்கள்.
3. ரிப்போர்ட் செய்யுங்கள்: இதுபோன்ற மோசடி மெசேஜ்கள் வந்தால், அந்த எண்ணை உடனே பிளாக் (Block) செய்துவிட்டு, சைபர் கிரைம் பிரிவில் புகாரளியுங்கள்.
அச்சம் வேண்டாம், விழிப்புணர்வு வேண்டும்
அவசரம் வேண்டாம். போக்குவரத்து போலீஸ் அல்லது அரசுத் துறை ஒருபோதும் தனிப்பட்ட மொபைல் எண்களிலிருந்து அவசரமாகப் பணம் கட்டச் சொல்லி லிங்க் அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் சிறு கவனக்குறைவு பெரும் பண இழப்பை ஏற்படுத்தலாம். விழிப்புடன் இருங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

