ஆதார் மையத்தில் கியூவில் நிற்க வேண்டாம்! மொபைல் நம்பர் மாற்ற வேண்டுமா? இதோ எளிய வழி!
New Aadhaar சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக வயதை உறுதிசெய்ய புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியது UIDAI. தனிப்பட்ட தகவல்களைப் பகிராமலேயே வயதைச் சரிபார்க்கலாம்.

New Aadhaar
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (DPDP Act) கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதி, உங்கள் பெயர், முகவரி போன்ற எந்தத் தனிப்பட்ட விவரங்களையும் பகிராமலேயே உங்கள் வயதை மட்டும் உறுதிசெய்ய உதவும்.
தரவுப் பகிர்வு இனி தேவையில்லை
இதுவரை ஆன்லைன் தளங்களில் வயதை உறுதிப்படுத்த முழு ஆதார் அட்டையையோ அல்லது பிற அடையாள அட்டைகளையோ சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் அபாயம் இருந்தது. ஆனால், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், "இந்த புதிய செயலி மூலம், எந்தவொரு கூடுதல் தரவையும் பகிராமல் (Zero-Knowledge Proof), நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை மட்டும் அந்தத் தளத்திற்கு உறுதிப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களுக்கு நிம்மதி
இந்த புதிய முறை ஆன்லைன் கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் குழந்தைகளைப் பாதுகாக்கப் பெரிதும் உதவும். வயதுக்குத் தகாத உள்ளடக்கங்களை (Age-gating) சிறார்கள் அணுகுவதைத் தடுக்கவும், ஆன்லைன் தளங்கள் பயனர்களின் வயதைச் சரியாகச் சரிபார்க்கவும் இது ஒரு சிறந்த தீர்வாக அமையும். இனி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
காகித பயன்பாடு குறையும்
ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் விமான நிலையங்களில் அடையாளத்தை நிரூபிக்க இனி ஆதார் அட்டையின் நகலை (Xerox) எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய செயலி மூலம் டிஜிட்டல் முறையிலேயே அடையாளத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இது காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆதார் நகல்கள் தவறான கைகளில் சிக்குவதையும் தடுக்கும்.
குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் வசதி
இந்தச் செயலியில் மற்றொரு சிறப்பம்சமாக, ஒரே மொபைல் எண்ணில் ஐந்து உறுப்பினர்களின் விவரங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது, தனித்தனியாக மொபைல் எண் இல்லாத குழந்தைகள் அல்லது முதியவர்களின் ஆதார் விவரங்களை ஒரே செயலியில் நிர்வகிக்கலாம். இது குடும்பத்துடன் பயணம் செய்யும்போது அடையாளச் சரிபார்ப்பை மிகவும் எளிதாக்கும்.
வீட்டிலிருந்தே அப்டேட் செய்யலாம்
புதிய ஆதார் செயலி மூலம், ஆதார் மையங்களுக்குச் செல்லாமலேயே மொபைல் எண்ணைப் புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற சேவைகளை வீட்டிலிருந்தே பெற முடியும் என்று UIDAI-யின் சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் செயலியில் உள்ள 'Contact Card' வசதி மூலம், விசிட்டிங் கார்டுக்குப் பதிலாக உங்கள் விவரங்களை டிஜிட்டல் முறையில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

