- Home
- டெக்னாலஜி
- செவ்வாய் கிரக நிலவில் இருந்து வெறும் 10 கிராம் துகள்கள்: ஜப்பானின் MMX விண்வெளி திட்டம்!
செவ்வாய் கிரக நிலவில் இருந்து வெறும் 10 கிராம் துகள்கள்: ஜப்பானின் MMX விண்வெளி திட்டம்!
ஜப்பானிய விண்வெளி முகமை செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான 'போபோஸ்' நிலவை நோக்கி MMX விண்கலம் 10 கிராம் துகள்களைச் சேகரித்து 2031-இல் பூமிக்குக் கொண்டுவரும்.

ஜப்பான் விண்வெளி ஆய்வு MMX
பூமியின் நிலவைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் நிலவைப் பற்றி நாம் அதிகம் கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை. ஜப்பானில் இருந்து செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸை (Phobos) நோக்கி ஒரு விண்கலம் ஏவப்பட்டுள்ளது. அங்கு சென்று, அதன் மேற்பரப்பில் உள்ள தூசு மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது இந்த விண்கலத்தின் நோக்கம்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் துணைக்கோள்களில் இருந்து மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, இங்குள்ள ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். இந்த விண்கலம் 2027 ஆகஸ்ட் மாதம் போபோஸைச் சென்றடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஜப்பானிய விண்வெளி முகமையால் (JAXA) வழிநடத்தப்படும் செவ்வாய் நிலவுகள் ஆராய்ச்சி திட்டம் (MMX) அந்தக் கிரகத்தின் நிலவுகள் எப்படி உருவாகின என்கிற மர்மத்தைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாரா ரஸ்ஸல் இந்தத் திட்டத்தின் மாதிரி ஆய்வுக்கான துணை அதிகாரியாகவும் உள்ளார்.
விண்வெளியில் இரு சிறிய நிலவுகள்
சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் 3 நிலவுகள் உள்ளன. பூமியின் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய ஃபோபோஸ் மற்றும் டெய்மோஸ் (Deimos) ஆகிய இரு நிலவுகள் உள்ளன. இவை இரண்டுமே மிகச் சிறியவை. ஃபோபோஸ் சுமார் 20 கி.மீ (12 மைல்) குறுக்களவைக் கொண்டுள்ளது, மேலும் டெய்மோஸ் சுமார் 10 கி.மீ (6 மைல்) குறுக்களவைக் கொண்டுள்ளது. அவை ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு ஏதோ விண்வெளி உருளைக்கிழங்குகள் போலத் தோன்றுகின்றன.
எம்எம்எக்ஸ் (MMX) விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அருகே நெருங்கிறபோது டெய்மோஸை ஆய்வு செய்கிறது. அதன்பிறகு ஃபோபோஸ் மீது கவனம் செலுத்தும். அதன் நிலப்பரப்பை ஆராய்வதற்காக ஒரு சிறிய ரோவரை அங்கு இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது எளிதான காரியமாக இருக்காது.
இவ்வளவு சிறிய நிலவில் இதுவரை யாரும் ரோவரைத் தரையிறக்கியது இல்லை என்று சாரா ரஸ்ஸல் கூறுகிறார். இது தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய அவர், "நிலவுக்கும் அதன் சொந்த ஈர்ப்பு விசை அதிகமாக இல்லை. ஆனால் அதைவிட அதிகமான ஈர்ப்பு விசை கொண்ட இன்னொரு பிரமாண்ட கிரகத்துக்கு அருகில் அது அமைந்திருக்கிறது. இது அதன் நிலப்பரப்பில் ரோவரைக் கொண்டு செல்வதை மேலும் கடினமாக்குகிறது" என்றார்.
10 கிராம் மாதிரி சேகரிப்பும் பூமிக்குத் திரும்புதலும்
ரோவர் ஒரு தரையிறங்கும் இடத்தைக் கண்டறியும். அதன் மூலம் பின்னர் எம்எம்எக்ஸ் விண்கலம்கூட ஃபோபோஸில் தரையிறங்க முடியும். மேற்பரப்பை அடைந்ததும், அது ஒரு ரோபோ கை மற்றும் இரண்டு மாதிரி சேகரிப்புக் கருவிகளை விரிவுபடுத்தி, நிலவின் துகள்களை சேகரிக்கும்.
இந்தப்பொருள் ஒரு சிறிய காப்ஸ்யூலில் அடைக்கப்பட்டு, 2031-ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பி, தெற்கு ஆஸ்திரேலியாவின் வூமேரா பாலைவனத்தில் தரையிறங்கும். திரும்பி வரப்போகும் பொருளின் அளவு மிகச் சிறியது - வெறும் 10 கிராம் மட்டுமே.
அது உண்மையில் மிகச் சிறிய அளவு, என்கிறார் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ரிசா அவ்டெல்லிடு. இவர் ஜப்பான் குழுவுடன் பணியாற்றுகிறார். அவரது கூற்றுப்படி, தனித்தனி துகள்கள் மீதும் கூட பல ஆய்வுகளை நம்மால் மேற்கொள்ள முடியும். நீங்கள் அறிவியல் ஆய்வை மேற்கொள்ள மேற்பரப்பில் இருந்து கிலோ கணக்கில் பொருட்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. அதனால் ஒவ்வொரு கிராமமும் மதிப்புமிக்கது தான், என்று அவர் தெரிவித்தார்.
மர்மத்திற்கு விடை தருமா?
செவ்வாயின் நிலவுகள் எங்கிருந்து வந்தன என்கிற புதிருக்கு இந்த மாதிரிகள் விடையளிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. விண்கல் ஒன்று செவ்வாயின் தொடக்க காலத்தில் அதன்மீது மோதி, அந்த சிதைவுகளில் இருந்து ஃபோபோஸ் மற்றும் டெய்மோஸ் உருவாகியிருக்க வேண்டும்.
இந்த நிலவுகள் சூரியக் குடும்பத்தின் வெளிப்பகுதியில் சுற்றித்திரிந்த விண்கற்களாக இருக்க வேண்டும்; அவை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். நமக்கு மாதிரிகள் கிடைக்கின்ற போது நாம் அதன் வேதியியல் மற்றும் தாது உள்ளடக்கம் வரை ஆழமாக ஆராய முடியும். இந்த 2 கருத்தாக்கங்களும் மிகவும் மாறுபட்ட முடிவுகளைத் தரும்," என்கிறார் சாரா ரஸ்ஸல். தொடர்ந்து பேசிய அவர், அவை இந்த பிரமாண்ட மோதலினால் உருவானதா அல்லது ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட விண்கற்களா என்பது உடனடியாக தெரிந்துவிடும். எனவே நம்மால் விரைவாக அதனைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றார்.
கூடுதல் பலன் & பிற நாடுகளின் திட்டங்கள்
அவை தங்கள் ஆய்வகங்களுக்குத் திரும்பும்போது கூடுதல் பலன் ஏதேனும் கிடைக்கலாம் என்றும் அந்த குழுவினர் நம்புகின்றனர். "மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஃபோபோஸ் செவ்வாயின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. அதனால் செவ்வாயின் மேற்பரப்பில் எந்த தாக்கம் இருந்தாலும் சிறு துகள்கள் ஃபோபோஸிலும் விதைக்கப்பட்டிருக்கலாம்," என்று கூறுகிறார் சாரா ரஸ்ஸல். மேலும் அவர், "நமக்கு கிடைக்கும் மாதிரியில் செவ்வாய் கிரகத்தின் துகள்களும் இருக்கலாம். எனவே அது செவ்வாயின் கட்டமைப்பு மற்றும் வரலாறு பற்றிய நேரடியான தகவல்களை வழங்கலாம் என்றார்.
செவ்வாய் கிரகத்திலிருந்து பொருட்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது, விண்வெளி விஞ்ஞானிகளின் நீண்டகால லட்சியமாக இருந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் 'பெர்சிவரன்ஸ்' (Perseverance) ரோவர், அங்குள்ள மாதிரிகளை கவனமாகச் சேகரித்து, அவற்றை கொள்கலன்களில் அடைத்து வைத்து வருகிறது.
சீனா செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கும் தனது சொந்தத் திட்டத்தைத் திட்டமிட்டு வருகிறது. இது 2028-இல் ஏவப்பட உள்ளது. 2031-இல் செவ்வாய் கிரகப் பொருட்களைப் பூமிக்குக் கொண்டுவர இந்தத் திட்டம் முயற்சிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

