சிந்திக்கத் தெரியாத ரோபோக்கள்... சிக்கலில் மாட்டும் மனிதர்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
AI செயற்கை நுண்ணறிவு (AI) நமது வேலைகளை எளிதாக்கினாலும், அது மனிதப் படைப்பாற்றலையும், செய்தித்துறையின் தனித்துவத்தையும் அழிக்கிறதா? நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் ஆய்வுகளின் முடிவுகள் என்ன? முழுமையான கட்டுரை உள்ளே

AI
செய்திகள் முதல் சிந்தனைகள் வரை... செயற்கை நுண்ணறிவு நம்மை சோம்பேறியாக்குகிறதா? நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
இன்று நாம் ஒரு மின்னஞ்சல் எழுத வேண்டுமா, ஒரு படத்திற்கு தலைப்பு வைக்க வேண்டுமா, அல்லது சிக்கலான தகவல்களைச் சுருக்க வேண்டுமா? சட்டென்று நம் நினைவுக்கு வருவது 'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் AI தான். "வேலை சுலபமாக முடிகிறதே!" என்று நாம் மகிழ்ந்தாலும், "இதன் மறுபக்கம் ஆபத்தானது" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
AI தொழில்நுட்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தாலும், அது நமது தனித்துவமான படைப்பாற்றலை (Creativity) மெல்ல மெல்ல அழித்து வருகிறதா? என்ற கேள்வி இப்போது வலுவாக எழுந்துள்ளது.
ஏன் AI-யால் மனிதனைப் போல சிந்திக்க முடிவதில்லை?
குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Queensland University of Technology) ஆய்வாளர் கேமரூன் ஷேக்கல் (Cameron Shackell) இதுபற்றிச் சொல்லும்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.
• "AI மாடல்களுக்கு 'நிஜ உலகம்' (Reality) என்றால் என்னவென்று தெரியாது. அவை இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான தரவுகளை (Data) வைத்துப் படித்து, அதைத் திரும்ப ஒப்புவிக்கின்றன."
• மனிதர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள், கலாச்சார அனுபவங்கள் அல்லது திடீரென தோன்றும் 'யுரேகா' (Eureka) தருணங்கள் AI-க்கு சாத்தியமில்லை.
• எனவே, AI-யால் ஏற்கனவே இருப்பதை மாற்றித் தர முடியுமே தவிர, மனிதனைப் போல புதிதாக, உணர்வுப்பூர்வமாக ஒன்றை உருவாக்க முடியாது.
ஒரே மாதிரியான சிந்தனைகள்: ஒரு சுவாரஸ்ய ஆய்வு
செப்டம்பர் 2025-ல் வார்டன் (Wharton) நடத்திய ஒரு ஆய்வில், AI மனிதர்களின் சிந்தனையை எப்படி சுருக்கிவிடுகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எக்ஸிடெர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆலிவர் ஹவுசர் (Oliver Hauser) கூறுகையில், "ஒருவர் எதையாவது உருவாக்கும் முன் AI-யிடம் ஐடியா கேட்டால், அவர் அந்த AI கொடுத்த வட்டத்திற்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்," என்கிறார். இதனால் பலரும் ஒரே மாதிரியான (Similar) படைப்புகளையே உருவாக்குகிறார்கள். தனித்துவமான, வித்தியாசமான கோணங்கள் குறைந்துவிடுகின்றன.
செய்தித் துறையில் விழுந்த முதல் அடி!
AI-யின் இந்தத் தாக்கம் செய்தித்துறையில் (Journalism) மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கூகுள் டிஸ்கவர் (Google Discover) போன்ற தளங்களில் AI உருவாக்கும் தலைப்புகள் மற்றும் சுருக்கங்கள் இதற்கு ஒரு சாட்சி.
1. பத்திரிகையாளர்களின் உழைப்பு வீண்: ஒரு செய்தியாளர் மணிக்கணக்கில் யோசித்து, உணர்வுப்பூர்வமாக வைக்கும் தலைப்பை (Headline), AI சில நொடிகளில் மாற்றி, ஒரு சப்பையான தலைப்பாகக் கொடுத்துவிடுகிறது.
2. காணாமல் போகும் செய்தியின் உயிர்: AI செய்திகளைச் சுருக்கித் தருவதால், அந்தச் செய்தியின் பின்னணி, ஆழம் மற்றும் நுணுக்கமான விஷயங்கள் வாசகர்களுக்குச் போய்ச் சேருவதில்லை.
3. வாசகர்கள் குறைவு: செய்தியின் சுருக்கத்தை முகப்பிலேயே படித்துவிடுவதால், முழு செய்தியையும் இணையதளத்திற்குள் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை சரமாரியாகக் குறைந்து வருகிறது.
என்னதான் தீர்வு?
AI என்பது ஒரு கருவி மட்டுமே. அது நமக்கு உதவியாளராக இருக்கலாமே தவிர, நமது மூளைக்கு மாற்றாக இருக்கக் கூடாது. செய்திகளோ, கலைப்படைப்புகளோ... அதில் மனித உணர்வுகளும், தனிப்பட்ட அனுபவங்களும் கலந்திருந்தால்தான் அது முழுமை பெறும்.
தொழில்நுட்பம் வளரலாம், ஆனால் அது மனிதனின் தனித்துவமான சிந்தனையை மழுங்கடிக்காமல் பார்த்துக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

